லக்னோ: உத்தர பிரதேசத்தில், அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத, 68,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து, அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பல்வேறு துறைகளில், 8.60 லட்சம் பேர் அரசு ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்களை, ‘மனவ் சம்பதா’ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கும்படி, அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் எஸ்.பி.கோயல் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத, 68,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஜனவரி மாதத்துக்கான சம்பளத்தை நிறுத்தி வைத்து, உ.பி., அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பலரும் இந்த விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
‘குரூப் – ஏ’ அதிகாரிகள் 2,628; ‘குரூப் – பி’ அதிகாரிகள் 7,204; ‘குரூப் – சி’ ஊழியர்கள் 34,926; ‘குரூப் – டி’ ஊழியர்கள் 22,624 பேர் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்கவில்லை. இவர்களில், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை போன்ற முக்கிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடங்குவர்.
சொத்து விபரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே, ஜனவரி மாத சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தவறும் பட்சத்தில், பிப்ரவரி மாத சம்பளமும் வழங்கப்படாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு, நிர்வாக ஒழுங்கு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
சொத்து விபரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில், அதை நிறைவேற்றாத ஊழியர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
