சென்னை: ‘நான் திமுகவில் இணைந்து விட்டேன். கடந்த காலங்களைப் பற்றி கவலையே இல்லை. அதிமுகவுக்கு எதிர்காலமே இனி இல்லை,’ என்று திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; அண்ணாதுரை ஆரம்பித்த தாய்க்கழகமான திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை இணைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. அண்ணாதுரை மற்றும் கருணாநிதி காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்து கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என்பதை உணர்ந்து திமுகவில் மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன்.
அரசியலில் சர்வாதிகாரியாகவும், ஆணவத்தோடும் நடந்து கொண்டிருக்கும் இபிஎஸ், எந்த காலத்திலும் இனி வெற்றி பெற முடியாது என்ற நிலையை அதிமுகவுக்கு உருவாக்கி விட்டார். லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இன்று ஸ்டாலினின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினை நாடு உற்று நோக்கிக் கொண்டு வருகிறது. ஒரு அரசியல் இயக்கத்தை ஒரு அரவணைப்போடு எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு, ஸ்டாலின் திமுகவை வழிநடத்தி வருகிறார்.
பெண்கள் மகிழ்ச்சி
அதேபோல, ஆட்சியில் கடந்த 5 ஆண்டு காலம் முதல்வராக பொறுப்பேற்று அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளில் சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு தந்து கொண்டிருக்கிறார். அடித்தட்டு மக்கள், மேல்த்தட்டு மக்களுக்கு இணையாக தங்களின் வாழ்நாளை உருவாக்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்துகிறார். அதிலும், பெண்கள் மனமகிழ்ச்சியோடு குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு குடும்பங்களை வழிநடத்துவதற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். சட்டசபை வரலாற்றில் அண்ணாதுரை அனைத்து கட்சிகளையும் அரவணைத்தாரோ, அதுபோல ஸ்டாலினும் தாயுள்ளத்தோடு அரவணைத்து அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கான உரிமையை சரிசமமாக வழங்கினார்.
நடந்து முடிந்த பார்லி தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றது. திமுகவுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டில் அதனை அழிப்பதற்கான பல முயற்சிகள் எந்த சூழலில் ஏற்பட்டாலும், அதனை தடுத்து நிறுத்தி, திராவிட இயக்கத்தை கட்டிக் காப்பதில் ஸ்டாலின் முன்னணி தலைவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதிமுகவை இன்று பொறுப்பில் இருக்கும் தற்காலிக பொதுச்செயலாளர் இபிஎஸ், அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார் என்று நினைத்து தான், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் திமுகவில் இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
சாதாரண தொண்டன்
நான் முதல்வராக பொறுப்பேற்ற போது, கருணாநிதி பாசத்தோடு, பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம் என்று பாராட்டினார். இதனை நன்றியோடு நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். திராவிட இயக்கம், கொள்கையை காக்க, திமுகவே தலைசிறந்த இயக்கம். தமிழகத்தை காப்பதற்கும், ஆட்சியை வழிநடத்தி செல்வதற்கும் சிறந்த இயக்கமாக திமுக விளங்குகிறது. திமுகவில் இன்று தொண்டனாகத்தான் இணைந்துள்ளேன். இந்த இயக்கம் மேலும் வளர்ச்சியடைய ஒரு தொண்டனாக நானும் பாடுபடுவேன்.
அழுத்தம் இல்லை
திமுகவில் இணைவது நான் சுயமாக எடுத்த முடிவு. கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அரசியல் நாகரிகம், ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கு அதிமுகவில் இல்லை. திராவிட இயக்கத்திற்கு ஒரு பிரச்னை என்றால், அதனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து திமுகவில் இணைந்தேன். திமுகவில் இணைய எந்தவித அச்சுறுத்தலோ, அழுத்தமோ, கட்டாயமோ இல்லை.
முதல்வர் கையில்…
வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின், எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் போட்டியிடுவேன். பொறுப்பான இயக்கத்தை வழிநடத்துபவர்கள் ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்த வேண்டும். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். எல்லா அம்சங்களையும் சிந்தித்து பார்த்து தான் இணைந்திருக்கிறேன். இன்று காலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகளில், ‘நீங்கள் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள்,’ என்று பாராட்டியும், நன்றியும் கூறி வருகின்றனர். யார் நல்லது செய்தாலும் அவர்களை பாராட்டும் மனம் கொண்டவன் நான்.
கவலை இல்லை
நான் திமுகவில் இணைந்து விட்டேன். கடந்த காலங்களைப் பற்றி கவலையே இல்லை. திமுக தீய சக்தி என்று நான் என்றுமே சொன்னது கிடையாது. அதிமுகவுக்கு எதிர்காலமே இனி இல்லை. திமுகவை எதிர்க்கும் சக்தி இன்று அரசியலிலேயே இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.
