கிராமம்தோறும் 'ஸ்டார்ட்அப்' நிறுவனம் 5 மாவட்டங்களில் 11 இடங்களில் துவக்கம்

சென்னை : செங்கல்பட்டு, கோவை உட்பட ஐந்து மாவட்டங்களில், 11 கிராமங்களில், கிராமம்தோறும் புத்தொழில் திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது. இந்த கிராமங்களில் புத்தொழில் சூழல் உருவாக்க, கல்வி நிறுவனம் அல்லது தொழில் நிறுவனங்களுடன் இவை இணைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நகரங்களில் வசிப்போர் தகவல் தொழில்நுட்பம், ஆன்லைன் வணிகம் உட்பட பல்வேறு துறைகளில், ‘ஸ்டார்ட்அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்களை துவக்கி வருகின்றனர்.

கிராமங்களில் வசிக்கும் நபர்களிடம் இருந்து சிறந்த தொழில் ஐடியா எனப்படும் கருத்துரு இருந்தும், நிதி கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், தொழில் துவங்க முடியவில்லை.

இதையடுத்து, கிராமம்தோறும் புத்தொழில் திட்டத்தின் கீழ் கிராமங்களில் ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்கி, சிறந்த தொழில் ஐடியா வைத்திருப்போர் ஸ்டார்ட்அப் நிறுவனம் துவக்குவதை தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் ஊக்குவிக்க உள்ளது.

முதல் கட்டமாக, 100 கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்த விருப்பம் உள்ள கிராமங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு, – ஐந்து கிராமங்கள் விண்ணப்பம் செய்திருந்தன.

அதன் அடிப்படையில் தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுதாவூர், கொத்திமங்கலம், அருங்குன்றம்; கோவையில் அன்னுார்; கடலுாரில் நத்தப்பட்டு, பிஞ்சனுார், புவனகிரி, பூங்குணம்; புதுக்கோட்டையில் அம்மாசத்திரம், வாதனக்குறிச்சி; திருவாரூர் வையாகுளத்துார் ஆகிய, 11 கிராமங்களில், கிராமந்தோறும் புத்தொழில் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமங்கள் அருகில் உள்ள ஸ்டார்ட்அப் திட்டத்தை முன்னெடுக்கும் கல்வி நிறுவனம் அல்லது தொழில் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன.

இதன் வாயிலாக கிராமங்களில் வசிக்கும் இளைஞர், மகளிருக்கு ஸ்டார்ட்அப் நிறுவனம் துவக்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

ஒரு கிராமத்துக்கு ரூ.1 லட்சம் ஒரு கிராமத்திற்கு தலா ஒரு சிறந்த தொழில் ஐடியா வைத்திருக்கும் நபர் தேர்வு செய்யப்பட்டு, தலா, 1 லட்சம் ரூபாயை ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் வழங்கும். பின், புத்தொழில் ஆதார திட்டத்தில் நிதியுதவி, சந்தை வாய்ப்பு, முதலீட்டு வாய்ப்பு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும்.

Source link