ஒஸ்லோ: நார்வே பட்டத்து இளவரசியின் மகன் மீது பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கடத்தல் என, 38 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடான நார்வேயின் பட்டத்து இளவரசியான மெட்டே மேரிட்டின் மூத்த மகனாக இருப்பவர் மேரியஸ் போர்க் ஹோய்பி, 29. இவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், போதைப் பொருள் கடத்தல் என, 38 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மேரியஸ் போர்க் ஹோய்பி, 2018 – 2024 வரை நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டிலும், 2024ல் அவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கிறது. இது, நார்வே அரச குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மேரியஸ் போர்க் ஹோய்பிக்கு, 16 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
பட்டத்து இளவரசி மெட்டே மேரிட்டின் முதல் திருமணத்தில் பிறந்தவரான ஹோய்பிக்கு, நார்வேயில் எந்த அரச பட்டமோ, அதிகாரப்பூர்வ பொறுப்புகளோ இல்லை. அவர் அந்நாட்டின் சாதாரண குடிமகனாகவே கருதப்படுகிறார். எனவே, விசாரணையில் அரச குடும்பம் தலையிடாது என, பட்டத்து இளவரசர் ஹாகோன் அறிவித்துள்ளார்.
