உடுமலை: பருத்திக்கு நிலையான விலை கிடைக்க, உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து பணிகள் மற்றும் துறைகளை ஒருங்கிணைத்து, மத்திய அரசு, ‘கஸ்துாரி காட்டன் பாரத்’, என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய பருத்திக்கழகம் சார்பில், நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், நிலையான விலை கிடைக்காதது பின்னடவை ஏற்படுத்துகிறது.
தற்போது உற்பத்தி முதல் விற்பனை வரை, பருத்திக்கு தேவையான அனைத்து பணிகள் மற்றும் துறைகளை ஒருங்கிணைத்து, ‘கஸ்துாரி காட்டன் பாரத்’ என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
திட்டத்தில், ஜவுளி அமைச்சகம், இந்திய பருத்திக்கழகம், ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு, ஜவுளித்துறை சங்கங்கள், ஜவுளித்தொழில் துறையுடன் விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளனர்.
திட்டத்தின் கீழ், பருத்தி சாகுபடி செய்யப்படும் கிராமங்களை தேர்வு செய்து, வேளாண்துறை மற்றும் ஜவுளித்துறை சங்கத்தினர் வாயிலாக, தரமான பருத்தி உற்பத்திக்கு தேவையான வழிகாட்டுதல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
அறுவடை சீசன் துவங்கியதும், வேளாண்துறை உள்ளடக்கிய, சிறப்பு குழுவினர், நேரடியாக பருத்தியை ஆய்வு செய்து, நுாலிழை நீளம், 35 மி.மீ.,க்கு அதிகமாக இருந்தால், ‘கஸ்துாரி காட்டன் பாரத்’ என சான்று கொடுப்பார்கள்.
இந்த சான்று கிடைப்பதால், பருத்தியின் தரம் உறுதியாகி ஜவுளித்துறையினர் எளிதாக கொள்முதல் செய்ய முடியும்.
ஏற்றுமதி மேம்பாட்டுக்குழுவும் இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், கஸ்துாரி காட்டன் பாரத் என சான்று வழங்கப்படும் பருத்திக்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் கிடைக்கும்.
முதற்கட்டமாக கஸ்துாரி பருத்தி திட்டத்தில், சிமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகம் வாயிலாக, உடுமலை பகுதி விவசாயிகளிடையே தரமான பருத்தி உற்பத்திக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
