புதுடில்லி: நீதித்துறை ஊழல்கள் குறித்த அத்தியாயம் இடம்பெற்றதால், சர்ச்சைக்குள்ளாகி தடை செய்யப்பட்ட என்.சி.இ.ஆர்.டி.,யின் 8ம் வகுப்பு பாட புத்தகத்தின் தயாரிப்பு குழுவில் வழக்கறிஞர் ஒருவர் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு பாட நுால்களை தயாரித்து வருகிறது.
சமீபத்தில் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்துக்கான புதிய புத்தகத்தை வெளியிட்டது. அதில் ‘சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற பாடத்தில், நீதித்துறையில் வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை, ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றால் ஏற்படும் சவால்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தன.
இதனால் சர்ச்சை எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு பாடப்புத்தகத்திற்கு தடை விதித்து, அச்சு மற்றும் டிஜிட்டல் பிரதிகளை பறிமுதல் செய்ய உத்தர விட்டது.
இந்நிலையில் பாட புத்தக தயாரிப்பு குழுவில் வழக்கறிஞர் ஒருவர் இடம்பெற்றிருந்ததாகவும், அதே சமயம் சட்டத்துறை நிபுணர்களிடம் கட்டாயமாக கருத்து கேட்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை எனவும் என்.சி.இ.ஆர்.டி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பாடநுால் தயாரிப்பில், ஆசிரியர்கள், நிபுணர்கள், என்.சி.இ.ஆர்.டி., பேராசிரியர்கள் மற்றும் தேசிய பாடத்திட்ட மற்றும் கற்றல் – கற்பித்தல்- குழுவினர் ஆகியோர் பல நிலைகளில் ஆய்வு மேற்கொள்வர். ஒரே ஒருவரால் அத்தியாயம் தயாரிக்கப்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய பாடத்தில் நீதித்துறை ஊழல்கள் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து விசாரிக்க துறை ரீதியான ஆய்வு நடைபெற்று வருகிறது.
