சென்னை: 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்த பாவம், தலைமுறைக்கும் தொடரும்' என, அ.தி.மு.க., மிகக் கடுமையாக

சென்னை: ‘முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்த பாவம், தலைமுறைக்கும் தொடரும்’ என, அ.தி.மு.க., மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க., அறிக்கை:

‘ரோஸி டீக்கடை’ நடத்திக்கொண்டு இருந்த பன்னீர்செல்வத்தை ஆளாக்கி, அமைச்சராக்கி, முதல்வராக்கியது அ.தி.மு.க., தான். ஜெயலலிதா வளர்த்த இயக்கத்திற்கு, ‘ஏ’ படிவம், ‘பி’ படிவங்களில் கையெழுத்து போடும் பெருமையை கொடுத்து அழகு பார்த்தனர், அ.தி.மு.க., தொண்டர்கள்.

ஆனால், அ.தி.மு.க., கட்சிக்குள் இருந்தும், தி.மு.க., உடன்பிறப்பாகவே பன்னீர்செல்வம் இருந்துள்ளார். அ.தி.மு.க., தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்., மாளிகையில் குடியிருந்து, கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்துள்ளார்.

உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தவர் பன்னீர்செல்வம். அந்த பாவம் சும்மா விடுமா?

அரசியல் அனாதையாக இனி அவரால், அ.தி.மு.க., கரை வேட்டியைக்கூட கட்ட முடியாது; அந்த நிலையை அ.தி.மு.க., தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

பசுத்தோல் போர்த்திக் கொண்டு பன்னீர்செல்வம் நடத்திய நாடகமெல்லாம் அம்பலமாகி, வேறு வழியே இல்லை என்றதும், கூச்சமே இல்லாமல் முதலாளியின் வாசற்படிக்கே போய் விட்டார்.

அவரை போன்ற பச்சோந்திக்கு, ஜெயலலிதா எல்லாம் சும்மா தானே? ‘உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க…’ என, வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்.

இந்த கருமத்துக்கு தர்மயுத்தம் வேறு. பன்னீர்செல்வத்தை நம்பி சென்று ஏமாந்த, அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும். பன்னீர்செல்வம், இனி தயவு செய்து ஜெயலலிதா புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக் கொள்ளட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link