பந்தலுார்: பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் மகள், மீண்டும் பார்மசி கல்லுாரியில் சேர்ந்து படிக்க துவங்கியதால், குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியை சேர்ந்த ஆலு குறும்பா பழங்குடி ஓவியர் கிருஷ்ணன், 52. இவர், கடந்த ஆண்டு மார்ச்சில் மரணமடைந்தார். இவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இவரது மனைவி சுசீலா, மேட்டுப்பாளையம் பாக்கு தோப்பில் கூலி வேலை செய்கிறார்.
மூத்த மகள் வாசுகி, ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில் படித்த நிலையில், தந்தை இறப்பிற்கு பின், கட்டணம் செலுத்த வழியின்றி படிப்பை நிறுத்தினார். இது குறித்து, நம் நாளிதழில், ஜன., 28ல் விரிவான செய்தி வெளியானது.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் முருகன், அந்த குடும்பத்துடன் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியதுடன், வாசுகி படிப்பை தொடர, கல்லுாரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் பேசினார்.
தொடர்ந்து, கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவுரையில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், வாசுகி தொடர்ந்து படிக்க நடவடிக்கை மேற்கொண்டார். மாணவி நேற்று முதல் கல்லுாரிக்கு சென்று வருகிறார்.
வாசுகியின் தாய் சுசீலா கூறுகையில், ”என் மகள் படிக்க நடவடிக்கை எடுக்க உதவிய ‘தினமலர்’ மற்றும் பிற செய்தி நிறுவனங்கள், மத்திய அமைச்சர் முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. வறுமையில் உள்ள எங்கள் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும்,” என்றார்.
