முதல்வர் அறிவிப்பின்படி கருணைப்பணி; நடவடிக்கை இல்லாதது ஏமாற்றுவதற்கு சமம்: உயர்நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: முதல்வரின் அறிவிப்பை பின்பற்றி கருணைப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. அவ்வாறு செய்யாமல் இருப்பது ஏமாற்றுவதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளிப்படுத்தியது.

துாத்துக்குடி மாவட்டம் முடிவைத்தனேந்தல் ஜெயதுர்காவேணி தாக்கல் செய்த மனு: ஏரல் போலீசில் எஸ்.ஐ.,யாக என் தந்தை பாலு பணிபுரிந்தார். இவர் 2021 பிப்.,1ல் வாகன சோதனையில் ஈடுபட்டார். மது போதையிலிருந்து முருகவேல் என்பவரை பாலு கண்டித்தார். ஆத்திரமடைந்த முருகவேல் சரக்கு வாகனத்தை மோதச் செய்து பாலுவை கொலை செய்தார்.

அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு கருணைப் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் எனக்கு கருணைப் பணி வழங்கக் கோரி டி.ஜி.பி.,க்கு விண்ணப்பித்தேன்.

அவர், ”எனது குடும்பம் வறுமை நிலையில் இல்லை,” என 2023ல் நிராகரித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தேன். மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

திருமணமான மகள்

கருணைப் பணி நியமனம் பெற தகுதியுடையவர் என விதிகளில் உள்ளதை தனி நீதிபதி கருத்தில் கொள்ள தவறிவிட்டார். எனது சகோதரர் எங்களுக்கு உதவவில்லை. நான், தாய் வறுமை நிலையில் உள்ளோம். தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

பிப்., 25 ல் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் தந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் நியமனம் வழங்குவது குறித்து முதல்வர், அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை உண்மையில் நிறைவேற்றப்படவில்லை என்பதை இவ்வழக்கு உணர்த்துகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக 2021 ஜன., முதல் 2026 ஜன., வரை முதல்வர்கள், அமைச்சர்கள் சார்பில் எத்தனை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, அவற்றில் எத்தனை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன, இவ்வழக்கை பொறுத்தவரை 2021 பிப்., 1ல் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்த அரசு விரும்புகிறதா அல்லது அறிவிப்பை நிராகரித்து மனுதாரருக்கு நியமனம் வழங்க மறுக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சீனி சையத் அம்மா ஆஜரானார்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன்: மனுதாரருக்கு கருணைப் பணி வழங்க அரசுக்கு டி.ஜி.பி., புதிதாக பரிந்துரைத்துள்ளார். அதை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மனுதாரரைப் போல் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு பணி வழங்க முடியவில்லை. காரணம் குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே அரசு பணியில் உள்ளனர்.

ஏற்புடையது அல்ல

நீதிபதிகள்: பணியின்போது சமூக விரோதிகளால் கொலை செய்யப்படும் அரசு ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கருணைப் பணி நியமனம் வழங்கப்படும் என முதல்வர், அமைச்சர்கள் அறிவிக்கின்றனர். பின் விதிமுறைகளை காரணமாகக்கூறி கருணைப் பணி வழங்க மறுப்பது ஏற்புடையது அல்ல.

முதல்வரின் அறிவிப்பை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. அவ்வாறு செய்யாமல் இருப்பது ஏமாற்றுவதற்கு சமம். முதல்வரின் அறிவிப்பிற்கு முரணாக அதிகாரிகள் நடந்து கொள்வது ஏன் என்பது புரியவில்லை.

இதுபோல் பல்வேறு வழக்குகளில் முதல்வர் உறுதியளித்த சூழலிலும் பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முதல்வரின் அறிவிப்பை நிறைவேற்ற அதிகாரிகள் ஏன் தாமதப்படுத்துகின்றனர், மறுக்கின்றனர் என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதல்வர் அறிவிப்பு வெளியிட்டால் அதை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அப்போதைய முதல்வரின் உத்தரவுப்படி மனுதாரருக்கு பணி வழங்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் மார்ச் 13 ல் தெளிவுபடுத்த வேண்டும் என்றனர்.

Source link