நமது நிருபர்
மாலத்தீவுகளுடன் தூதரக உறவுகளை துண்டிப்பதாக மொரீஷியஸ் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டம், மொரீஷியஸ் நாட்டுக்கு சொந்தமானது. 1965ல் காலனி ஆட்சியை நடத்திய பிரிட்டன், மொரீஷியஸ் நிர்வாகத்தில் இருந்து சாகோஸ் தீவுக் கூட்டத்தை தனியாக பிரித்து விட்டது. இதனால் மொரீஷியஸ் சுதந்திரம் பெற்ற நிலையிலும், சாகோஸ் தீவுக்கூட்டம் பிரிட்டீஷ் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து இருக்கிறது. இந்த தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ராணுவ தளம் செயல்படுகிறது.
இந்நிலையில் சாகோஸ் தீவுக் கூட்டத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் மொரீசியஸ் நாடு வழக்கு தொடர்ந்தது. விசாரணை முடிவில் அந்த நாட்டுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இந்தியா உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளும் இந்த விவகாரத்தில் பிரிட்டனுக்கு எதிராகவும், மொரீசியஸ் நாட்டுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.
வேறு வழியில்லாத நிலையில், சாகோஸ் தீவுக் கூட்டத்தை மொரீசியஸ் நாட்டிடம் ஒப்படைக்க பிரிட்டன் முன் வந்துள்ளது. இதை முதலில் ஆதரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்போது கடுமையாக எதிர்க்கத் தொடங்கியுள்ளார். ஈரானுடன் போர் நடத்தும் பட்சத்தில் தங்களுக்கு டியாகோ கார்சியா ராணுவ தளம் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இந்த விவகாரத்தில் மாலத்தீவுகள் கருத்து தெரிவித்துள்ளது. சாகோஸ் தீவுக் கூட்டத்தின் மீதான மொரீஷியஸ் நாட்டின் இறையாண்மையை தாங்கள் ஏற்கவில்லை என்று மாலத்தீவு அதிபர் சமீபத்தில் தெரிவித்தார். தங்கள் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் கீழ் சாகோஸ் தீவுக்கூட்டம் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தங்களிடம் சாகோஸ் தீவுக் கூட்டத்தை ஒப்படைத்தால், டியாகோ கார்சியாவில் அமெரிக்காவின் ராணுவ தளம் தொடர்ந்து செயல்படலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் மொரீஷியஸ் மற்றும் மாலத்தீவு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மொரீஷியஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாகோஸ் தீவுக் கூட்டத்தின் மீதான மொரீஷியஸ் நாட்டின் இறையாண்மையை இனியும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று மாலத்தீவு சமீபத்தில் அறிவித்துள்ளது. மேலும் பிரிட்டனுக்கும் மொரீஷியஸ் நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பாகவும் மாலத்தீவு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மாலத்தீவு உடன் அனைத்து ராஜதந்திர உறவுகளையும் மொரீஷியஸ் உடனடியாக துண்டித்துக் கொள்கிறது. மொரீஷியஸ் தனது தேசிய நலனைப் பாதுகாப்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம், சர்வதேச சட்டம், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய இத்தகைய முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
