சென்னை: ‘மத்திய அரசின் பட்ஜெட்டில், குறைந்த விலை வீடுகளுக்கு, எவ்வித ஆதரவும் அளிக்கப்படவில்லை’ என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘கிரெடாய்’ தமிழக பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் டபிள்யு . எஸ். ஹபீப் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின், 2026 – 27ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சிக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரியல் எஸ்டேட் துறையில், விரைவாக கட்டட அனுமதி கிடைப்பது உட்பட, டிஜிட்டல் சார்ந்த மேம்பாட்டுக்கான திட்டங் கள் இடம் பெற்றுள்ளன.
புதிய வழித்தடங்கள் குறித்த அறிவிப்பால், சென்னை, கோவை, மதுரை நகரங்களில், வளர்ச்சி பணிகள் அதிகரிக்கும். இருப்பினும், குறைந்த விலை வீடுகளுக்கு, இந்த பட்ஜெட்டில் ஆதரவு தெரிவிக்கப்படவில்லை.
இது தொடர்பான அறிவிப்புகள் இல்லாதது, ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தின் விலை, கட்டுமான செலவு அதிகரித்து வரும் நிலையில், சலுகை அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
குறைந்த விலை வீடுகளுக்கான வரம்புகளை மறு ஆய்வு செய்வது போன்ற விஷயங்களில், அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
