துணை வேந்தர் தேடல் குழு நடவடிக்கைகள் சட்டத்திற்கு எதிரானவை: கவர்னர் மாளிகை

சென்னை: ‘தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்படும் துணை வேந்தர் தேடல் குழு நடவடிக்கைகள் சட்டப்படி செல்லாது’ என, கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி, கோவை, சேலம் பல்கலைகளின் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான பெயர்களை பரிந்துரைக்கும் தேர்வு குழுக்களை அமைப்பது மற்றும் அந்த தேர்வு குழுக்களுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு ஆகியவை தொடர்பான உண்மை மற்றும் சட்டப்பூர்வ நிலைப்பாட்டை பதிவு செய்ய விரும்புகிறோம்.

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் தரத்தை பாதுகாக்கும் வகையில், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மற்ற கல்விப் பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகளை, கடந்த 2018ல், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., நிர்ணயித்தது.

அதுவே, உயர் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் கொண்ட சட்டப்பூர்வமான நிறுவனம். அதன் விதிகளின்படி, துணை வேந்தரை நியமிப்பதற்கான பெயர் பட்டியலை பரிந்துரைக்கும் தேர்வு குழுக்களில், பல்கலை மானிய குழு தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு உறுப்பினர் இடம்பெற வேண்டும்.

அதனால், பல்கலை மானியக் குழுவின் ஒழுங்குமுறைகளுக்கு மாறாக, ஒரு தேர்வுக் குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின்படி நியமிக்கப்படும் எந்த துணை வேந்தரின் நியமனமும் செல்லாது.

இந்நிலையில், துணை வேந்தரை நியமிக்கும் சட்டத்தில் உள்ள வேந்தர் என்ற சொல்லுக்கு பதில், அரசு என்ற சொல்லை தமிழக அரசு மாற்றி உள்ளது. அதாவது, துணை வேந்தரை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை, அரசு பறித்துள்ளது. இதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதற்கிடையே, தேர்வு குழுக்களை அமைப்பது குறித்து, ஏற்கனவே வேந்தர் வெளியிட்ட அறிவிக்கைகளையும், பல்கலை மானியக் குழுவின் அறிவிக்கைகளையும் எதிர்த்து, தமிழக அரசு, ‘ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகள் நடைமுறையில் உள்ளன. ஆனாலும், பல்கலை மானியக் குழு தலைவரின் உறுப்பினர் இல்லாமல், துணை வேந்தரை நியமிக்கும் குழு செயல்படுவதாக தமிழக அரசு கூறுவது கவலைக்குரியது.

அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் வாயிலாக தேர்வு பட்டியலை பெற்று, திருச்சி பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைகளில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிர்வாக நடவடிக்கைகள், சட்டத்திற்கு புறம்பானவை என, கவர்னர் மாளிகை கருதுகிறது.

அதன்படி, இந்த குழுக்கள் யாரையேனும் துணை வேந்தராக தேர்வு செய்தால், அது சட்டத்திற்கும் நீதிக்கும் எதிரானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link