கொல்கட்டா: கொல்கட்டா, ஈடன் கார்டன் ஆடுகளம், பேட்டர்களுக்கு சாதகமானது. இங்கு அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட இந்திய வீரர்கள், ரன் மழை பொழிய காத்திருக்கின்றனர்.
இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. ‘பிரிவு-1’ல் முதலிடம் பெற்ற தென் ஆப்ரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் முக்கிய ‘சூப்பர்-8 போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி வெளியேறும்.
பாதிப்பு வருமா
நேற்று கொல்கட்டாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இங்கு நாளை மழைக்கு வாய்ப்பு இல்லாதது நல்ல விஷயம். ஏதாவது பிரச்னையால், போட்டி கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்போது ‘ரன் ரேட்டில்’ முன்னிலையில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதி வாய்ப்பை பெறும்.
அதிரடி ஆட்டம்
சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி மீண்டும் அதிரடியாக ரன் குவிக்க தயாராக உள்ளது. கடந்த போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக அபிஷேக் சர்மா (55), ஹர்திக் பாண்ட்யா (50), திலக் வர்மா (44), விளாச, 256/4 ரன் எடுத்து, எளிதாக வென்றது. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சையும் சிதறடிக்க உள்ளனர். ‘பேட்டிங்’ சொர்க்கபுரியான ஈடன் கார்டன் மைதானத்தில் ஸ்காட்லாந்து அணி 207/4 (எதிர், இத்தாலி) குவித்தது. இதில் ஸ்காட்லாந்து ‘ஆப்-ஸ்பின்னர்’ மைக்கேல் லீஸ்க், 4 விக்கெட் சாய்த்து, ஆட்டநாயகன் விருது வென்றார். இதனால் ‘ஸ்பின்னர்’களும் சாதிக்கலாம். ஆரம்பத்தில் பந்துகள் ‘பவுன்ஸ்’ ஆகும். இது, பும்ரா, அர்ஷ்தீப் சிங்கிற்கு சாதகம் என்பதால், இந்தியா வெல்ல வாய்ப்பு அதிகம்.
கங்குலி ஆய்வு
நேற்று ஈடன் கார்டன் ஆடுகளத்தை பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி, ஆடுகள பராமாரிப்பாளர் சுஜன் முகர்ஜி பார்வையிட்டனர். ஸ்காட்லாந்து 207 ரன் குவித்த அதே ஆடுகளத்தில் தான் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டி நடக்க உள்ளது. இதனால் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது.
சுஜன் முகர்ஜி கூறுகையில்,”ஆடுகளத்தின் உறுதித்தன்மையை கங்குலி ஆய்வு செய்தார். தரமாக அமைக்கப்பட்டுள்ளதாக பாராட்டினார். வழக்கமான ஈடன் கார்டன் ஆடுகளமாக இருக்கும். எளிதாக ரன் எடுக்கலாம். பவுலர்களுக்கு சற்று உதவும்,”என்றார்.
ராசி எப்படி
கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏற்கனவே நடந்த 4 ‘டி-20’ போட்டிகளிலும் (2018- 2022) இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
* தற்போதைய ‘டி-20’ உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதல் முறையாக ஈடன் கார்டனில் களமிறங்க உள்ளது. இங்கு ஏற்கனவே விளையாடிய இரு போட்டிகளில் ஸ்காட்லாந்து, இத்தாலி அணிகளை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீசிற்கு சாதகம்.
* ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் 4 முறை மோதின. இதில் இந்தியா 1, வெஸ்ட் இண்டீஸ் 3ல் வென்றன.
* இரு அணிகளும் 30 ‘டி-20’ போட்டியில் மோதின. இந்தியா 19, வெஸ்ட் இண்டீஸ் 10ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
கவாஸ்கர் வியப்பு
‘டி-20’ உலக கோப்பை தொடரில் 3 முறை ‘டக்’ அவுட்டான இந்தியாவின் அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வேக்கு எதிராக 30 பந்தில் 55 ரன் எடுத்து, ‘பார்மை’ மீட்டார். இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,”ஜிம்பாப்வே பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டார் அபிஷேக் சர்மா. வழக்கம் போல அதிரடியாக ஆடவில்லை. ஒரு முறை பந்தை தடுத்து ஆடினார். இதை பார்த்த போது வியப்பாக இருந்தது. அரைசதம் கடந்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். தென் ஆப்ரிக்காவிடம் சந்தித்த தோல்வியில் இருந்து இந்திய அணி பாடம் படித்தது. அணியில் மீண்டும் சேர்க்கப்பட்ட சாம்சன், நல்ல துவக்கம் தந்தார்.
வெஸ்ட் இண்டீசை எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது. முற்றிலும் மாறுபட்ட அணியாக காட்சி அளிக்கிறது. பேட்டர்கள், பவுலர்கள் நல்ல ‘பார்மில்’ உள்ளனர். முதல் பந்தில் இருந்தே பேட்டர்கள் விளாசுகின்றனர். பந்துகள் எல்லையை கடந்து சிக்சருக்கு செல்கின்றன. இவர்களது பேட்டிங் படையை கட்டுப்படுத்த, இந்தியா சிறந்த திட்டம் வகுக்க வேண்டும்,”என்றார்.
