மெக்சிகோவில் உலக கோப்பை உறுதி * ரவுண்ட் அப்

மெக்சிகோ சிட்டி: ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. மெக்சிகோவில் மட்டும் 13 போட்டிகள் நடக்க உள்ளன.

கடந்த வாரம் மெக்சிகோவில், போதை கும்பல் தலைவன் கொல்லப்பட்டான். பின் நடந்த கலவரத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பம் கூறுகையில்,”உலக கோப்பை கால்பந்து தொடரை, திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்துவோம். இதுகுறித்து, ‘பிபா’ தலைவர் இன்பான்டினோவிடம் பேசியுள்ளேன்,” என்றார்.

அயர்லாந்தை வென்றது ஜெர்மனி

ஸ்டாக்ஹோம்: ஐரோப்பியாவின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான யூரோ கோப்பை கால்பந்து தொடர், வரும் மே 3-16ல் வடக்கு அயர்லாந்தில் நடக்க உள்ளது. இதற்கான இரண்டாவது கட்ட தகுதிச்சுற்று தற்போது நடக்கிறது. இதில் ‘லீக் ஏ’ ல் இடம் பெற்ற ஜெர்மனி அணி, நேற்று நடந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. 19 வயது பிரிவு தகுதிச்சுற்று, ‘லீக் பி’ ல் நடந்த போட்டியில் சுலோவேனிய அணி 2-0 என சைப்ரசை வென்றது.

டென்னிஸ்: காலிறுதியில் பாவோலினி

மெரிடா: மெக்சிகோவின் மெரிடா நகரில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகின் ‘நம்பர்-7’ வீராங்கனை இத்தாலியின் ஜாஸ்மைன் பாவோலினி, 6-0, 6-2 என ஆஸ்திரேலியாவின் பிரிஸ்சில்லாவை வென்றார். மற்றொரு போட்டியில் ‘நம்பர்-20’ ஆக உள்ள அமெரிக்காவின் எம்மா நவாரோ, 4-6, 4-6 என சீனாவின் ஷுவாய் ஜங்கிடம் தோல்வியடைந்தார்.

எக்ஸ்டிராஸ்

* புனேயில் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் பூனாச்சா, தாய்லாந்தின் இசாரோ ஜோடி, 7-5, 7-6 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ஷிமிசு, வடனபே ஜோடியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது.

* சிங்கப்பூரில் ‘கிராண்ட் ஸ்மாஷ்’ டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, 2-3 என (6-11, 11-7, 10-12, 11-9, 8-11) பிரான்சின் பெலிக்ஸ், அலெக்சிஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

* தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றின் 2 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

* ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைதேகி, 6-4, 4-6, 6-4 என சீனாவின் யுவாவை சாய்த்து, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

* இந்தியன் கால்பந்து லீக் தொடரின் 4வது சீசன் நேற்று துவங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப்பின் நம்தாரி, மிஜோரமின் அய்சவால் அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

Source link