வெளியேறியது பாகிஸ்தான்: இலங்கையை வென்றும் பலனில்லை

பல்லேகெலே: ‘டி-20’ உலக கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான். பரபரப்பான ‘சூப்பர்-8’ போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வென்றும் பலன் இல்லாமல் போனது.

இலங்கையின் பல்லேகெலேயில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான ‘சூப்பர்-8’ (பிரிவு-2) போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணிக்கு சாகிப்ஜதா பர்ஹான், பகர் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. பகர் ஜமான், 27 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு 176 ரன் சேர்த்த போது துஷ்மந்தா சமீரா ‘வேகத்தில்’ பகர் ஜமான் (84) போல்டானார். சாகிப்ஜதா, சர்வதேச ‘டி-20’ அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். தில்ஷன் மதுஷங்கா பந்தில் சாகிப்ஜதா (100) அவுட்டானார்.

பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 212/8 ரன் எடுத்தது.

நியூசிலாந்து தகுதி: அரையிறுதிக்கு ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெற, இலங்கையை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்கியது. இலங்கை அணிக்கு கமில் மிஷ்ரா (26), சரித் அசலங்கா (25) நம்பிக்கை தந்தனர். ஷதாப் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பவன் ரத்னாயகே அரைசதம் கடந்தார். இலங்கை அணி 15.5 ஓவரில் 148/5 ரன் எடுக்க, பாகிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்தது. சிறந்த ரன் ரேட் உடன் நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பவன் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிக்சர் மழை பொழிந்த கேப்டன் தசுன் ஷனகா, 24 பந்தில் அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன் தேவைப்பட்டன. ஷாகீன் அப்ரிதி பந்துவீசினார். முதல் 4 பந்தில், ஒரு பவுண்டரி, ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசிய ஷனகா, கடைசி இரு பந்தை வீணடித்தார். இலங்கை அணி 20 ஓவரில் 207/6 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஷனகா (76), வெல்லாலகே (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

Source link