லக்னோ: சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், 2029 – 30ம் நிதியாண்டிற்குள், 1 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை அடைவதற்கான முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து இரு முறை ஆட்சி அமைத்து, உ.பி.,யின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத், சமீபத்தில் சென்றார்.
முதலில் சிங்கப்பூர் சென்ற அவர், அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வாங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.
உற்சாக வரவேற்பு
அப்போது, பொருளாதார ஒத்துழைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு, நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பில், உ.பி.,க்கான வர்த்தக முதலீடு குறித்தும் சிங்கப்பூர் தலைவர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் விவாதித்தார்.
மேலும், அங்குள்ள பன்னாட்டு வர்த்தக நிறு வன பிரதிநிதிகளையும் சந் தித்து அவர் ஆலோசனை நடத்தினார். முடிவில், உ.பி., அரசு – சிங்கப்பூர் இடையே, 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
வீட்டுவசதி, சரக்கு போக்குவரத்து பூங்கா, பெரிய அளவிலான தரவு மையம் உள்ளிட்ட திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள், சிங்கப்பூரின், ‘யுனிவர்சல் சக்சஸ்’ குழுமம் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திட்டங்கள், உ.பி., யில், 20,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் பயணத்தின் போது, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களும் முடிவு செய்யப்பட்டது.
இரண்டாவதாக, ஜப்பான் சென்ற முதல்வர் யோகிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டு உயர்மட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய பின், கல்வி நிறுவனர் களுடனும் உரையாடினார்.
இந்த பயணத்தில், விவசாயம் மற்றும் தொழில் துறை இயந்திரங்களுக்கு பெயர் பெற்ற, ‘குபோடா கார்ப்பரேஷன்’ சென்சார் மற்றும் மின்சார வாகனங்களுக்கு தீர்வு வழங்கும், ‘மிண்டா கார்ப்பரேஷன்’ விமான போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்கும், ‘ஜப்பான் ஏவியேஷன் எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரி’ உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
உ.பி.,யில் யமுனா நதிக்கரையோரம், 500 ஏக்கர் பரப்பளவில் ஜப்பானிய நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக நிலம் ஒதுக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
முக்கிய மைல்கல்
யமனாஷி பல்கலை, யமனாஷி நைட்ரஜன் நிறுவனம், ஐ.ஐ.டி., கான்பூர், ஹார்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலை, ஐ.ஐ.டி., புவனேஸ்வர், மதன்மோகன் மாளவியா தொழில்நுட்ப பல்கலை ஆகியவற்றை இணைத்து, உ.பி.,யில், பசுமை ஹைட்ரஜன் சிறப்பு மையம் துவங்கவும் இந்த பயணத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜப்பான் பயணத்தின் இறுதியில், 90,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களும் இறுதி செய்யப்பட்டன.
இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ”சிங்கப்பூர், ஜப்பான் பயணம், உ.பி.,யின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
”இந்த நாடுகளில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 2029 – 30ம் ஆண்டிற்குள், 1 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கிய மைல்கல்லாக இருக்கும்,” என்றார்.
