'மைக்ரான்' செமிகண்டக்டர் ஆலை குஜராத்தில் துவக்கி வைத்தார் மோடி

சனந்த்: பிரதமர் நரேந்திர மோடி, ‘மைக்ரான் செமிகண்டக்டர் டெக்னாலஜி இந்தியா பிரைவேட்’ நிறுவனத்தின், செமிகண்டக்டர்களுக்கான ஏ.டி.எம்.பி., எனப்படும் அசெம்பிளி, டெஸ்ட்டிங் மற்றும் பேக்கேஜிங் ஆலையை, குஜராத்தில் துவக்கி வைத்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

குஜராத்தின் சனந்த் நகரில், மைக்ரான் நிறுவனத்தின் செமிகண்டக்டர் ஏ.டி.எம்.பி., ஆலையை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். இந்த ஆலை திறப்பு வாயிலாக, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் மெமரி மாட்யூல்களின், வணிக ரீதியிலான தயாரிப்பு மற்றும் வினியோகம் துவங்கியுள்ளது.

கடந்த 2023 செப்டம்பரில், ‘இந்திய செமிகண்டக்டர் மிஷன்’ திட்டத்தின் கீழ், முதல்முறையாக ஒப்புதல் பெற்ற திட்டம் இதுவாகும். இந்த திட்டத்துக்காக, மைக்ரான் நிறுவனம் 22,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.

இந்த ஆலை முழுமையாக செயல்பட துவங்கிய பின், கிட்டத்தட்ட 5 லட்சம் சதுர அடிக்கு ‘கிளீன்ரூம்’ எனப்படும், மைக்ரோ சிப் கையாளலுக்கான மிக துாய்மையான காற்று அறையை கொண்டிருக்கும். அது, உலகின் மிகப்பெரிய கிளீன்ரூம்களில் ஒன்றாக அமையும்.

ஏ.ஐ., மற்றும் உயர் செயல்திறன் கணினி துறைகள் முன்னேற்றம் கண்டு வருவதால், உலக அளவில் மெமரி மற்றும் தரவு சேமிப்புக்கான தேவை அதிகரித்து வருகிறது. அந்த தேவையை நிறைவு செய்யும் வகையில், உலக சந்தையை குறிவைத்து இந்த ஆலை செயல்படும்.

Source link