லா பாஸ்: பொலிவியாவில், புதிதாக அச்சிடப்பட்ட கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான பொலிவியா விமானப்படைக்கு சொந்தமான, ‘ஹெர்குலஸ் சி-130’ சரக்கு விமானம், புதிதாக அச்சிடப்பட்ட கரன்சி நோட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்றது.
இந்த விமானம், கிழக்கு பொலிவியாவின் சான்ட்டா குரூஸ் நகரில் இருந்து புறப்பட்டு, எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.
அப்போது, கடுமையான பனி காரணமாக பாதையில் இருந்து வழுக்கி வெளியே சென்றது.
பின்னர் அது அருகிலுள்ள பரபரப்பான சாலைக்கு சென்று, 15 கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை மோதி நொறுக்கி, அருகிலுள்ள வயலில் நின்றது. இந்த கொடூர விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்துக்குப் பின், விமானத்தில் இருந்த கரன்சி நோட்டுகள் சாலையெங்கும் சிதறிக் கிடந்தன.
இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் கூட்டமாக ஓடிவந்து பணத்தை எடுக்க முயன்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களை கலைத்தனர். ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பலர் பணத்தை எடுத்துச் செல்ல முயன்றதால், சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொலிவிய ராணுவ அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விமானத்தில் இருந்த விமானிகள், குழுவினர் உள்ளிட்டோரின் நிலை குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
