நம் நாட்டின் உயர் கல்வி முறை வெறும் ஏட்டுக் கல்வியோடு நின்றுவிடாமல், உலகத்துக்கே வழிகாட்டும் வகையில் உயரப்

நம் நாட்டின் உயர் கல்வி முறை வெறும் ஏட்டுக் கல்வியோடு நின்றுவிடாமல், உலகத்துக்கே வழிகாட்டும் வகையில் உயரப் போகிறது. பொருளாதார வளமை மற்றும் சமூக கலாசார வளர்ச்சி என்ற இரு இலக்குகளை எட்டும் வகையில் கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ந ம் நாட்டிற்கு இது ஒன்றும் புதிதல்ல. நம் நாடு, 1,000 ஆண்டுகளுக்கு முன்பே உயர் கல்வியில் தன்னிறைவு பெற்றிருந்தது. நவீன பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் முன்னோடியாக நாளந்தா, தக்ஷசீலா, விக்ரமசீலா பல்கலைகள் நம் நாட்டிற்கு மட்டுமின்றி, வெளிநாட்டு மாணவர்களுக்கும் உயர் கல்வியை கற்றுக் கொடுத்தன.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் பாரதத்தின் மீது நடந்த தொடர்ச்சியான படையெடுப்புகள், ஆங்கிலேயர்களின் ஆட்சி ஆகியவற்றால் சர்வதேச தரத்திலான நாளந்தா உள்ளிட்ட பல்கலைகள் அழிக்கப் பட்டன. அதன் விளைவாக, பெருமைமிகு பழங்கால கல்வி முறையில் இருந்து நாம் வெகு துாரத்திற்கு விலக வேண்டியதாயிற்று.

அழிக்கப்பட்ட அந்த கல்வி முறையை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, தேசிய கல்வி கொள்கை இயற்றப்பட்டு உள்ளது. பழங் கால பாரதத்தின் அறிவியல் மற்றும் விழுமியக் கல்வி யை இணைப்பதே இதன் முக்கிய நோக்கம். வெறும் பட்டம் வாங்குவது மட்டும் சிறந்த கல்வி அல்ல; நாட்டின் பொருளா தார வளமைக்கும் வித்திடுவதே சிறந்த கல்வி.

அந்த வகையில், ‘விக்சித் பாரத்’ எனப்படும் ‘வளர்ந்த இந்தியா’ இலக்கை 2047க்குள் அடைய, தேசிய கல்வி கொள்கை பெரிதும் உதவப் போகிறது. குறிப்பாக, ‘பழங்கால பெருமையுடன் வளமான எதிர்காலம்’ என்ற பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வைக்கு தேசிய கல்வி கொ ள்கை – 2020 முக்கிய பங்களிப்பு தரப்போகிறது.

இரு இலக்குகள்

ஒரே நேரத்தில் இரு வேறு இலக்குகளை எட்டிப் பிடிப்பது தான் இந்த கல்விக் கொள்கையின் சிறப்பு. அது எப் படி என்று பார்ப்போம்…

நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது 20 பல்கலைகள், 500 கல்லுாரிகள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால், இன்று வளர்ச்சி அபரிமிதமாக மாறிவிட்டது.

அதன் காரணமாக, தற்போது உயர் கல்வித் துறையில் மிக முக்கியமான நாடாக நம் பாரதம் திகழ்கிறது. தற்போதைய தேதியில் நாடு முழுதும் 1,170 பல்கலைகள், 50,000க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் இருக்கின்றன.

கல்வி நிறுவனங்களில் தற்போது அனைத்து துறைகள் பற்றியும் கற்றுத் தரப்படுகின்றன. ஆராய்ச்சிகளும் பெருமளவு அதிகரித்து விட்டன. எனினும் உயர் கல்வித் துறையில் நம் நாடு ஒரு முக்கியமான சவாலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

3உயர் கல்வித் துறைக்கான சேர்க்கை விகிதம், அதாவது ‘கிராஸ் என்ரோல்மென்ட் ரேஷியோ’ மக்கள் தொகைக்கு ஏற்ப இல்லை. தற்போதைய அளவில் அது 28 சதவீதம் என்ற நிலையிலேயே இருக்கிறது. வரும் 2035ம் ஆண்டுக்குள் 50 சதவீதத்திற்கு அதிகமாக உயர்த்துவது தான் அந்த சவால். பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்களில் 50 சதவீதம் பேர், அப்படியே கல்லுாரியில் சேருவதை உறுதி செய்வது தான் இந்த இலக்கு.

ஆனால், அது மட்டும் போதாது; பிறருக்கு வேலைவாய்ப்பு தரும் அளவுக்கு பட்டதாரிகளை உருவாக்க வேண்டும். அதற்கு தரமான கல்வி அவசியம்.

வெறும் ஏட்டுக் கல்வியோடு நின்றுவிடாமல், திறன்களை வளர்க்கும் கல்வியாக இருக்க வேண்டும். அப்போது தான் பட்டதாரியான ஒரு மாணவர், போதிய திறனுடன் வெளி உலகில் காலடி எடுத்து வைக்க முடியும்.

எனவே, வேலை தேடுபவராக இல்லாமல்; பிறருக்கு வேலை வாய்ப்பளிக்கும், ‘ஸ்டார்ட் – அப்’ தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும். இது தான் இரண்டாவது இலக்கு.

இந்த இரு இலக்குகளை அடைவதற்காகவே தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பள்ளி படிப்புக்குப் பின் கல்லுாரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை கணிசமாக உயர்த்த முடியும்.

அதனுடன், கல்வியின் தரம், ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாடு ஆகிய இலக்குகளையும் அடைய முடியும். ‘விக்சித் பாரத் – 2047’ என்ற இலக்கில், பரந்த உயர் கல்வியை பெற வேண்டுமெனில், முற்போக்கான நிர்வாக மாதிரி தேவை.

நம் நாடு பல்வேறு விஷயங்களில் வேற்றுமை கொண்டது. மாநிலத்திற்கு மாநிலம் உயர் கல்வியில் வெவ்வேறு நிலைகளில் கற்றல் நடக்கிறது. எனவே, நாடு முழுதும் ஒரே மாதிரியான கல்வி முறை அவசியம். அந்த கல்வி முறையும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் தரத்தை உறுதி செய்ய, நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான கல்வி நிர்வாக முறையை கட்டமைப்பது அவசியம்.

உயர் கல்வி நிறுவனங்களை பெரிய பல்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற்றுவதற்கு இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை நிச்சயம் தேவை. இந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கு வலுசேர்க்கும் விதமாக, ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் – 2025’ என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ஒரே குடையின்கீழ் ஓராயிரம் மாற்றங்களை கொண்டு வரவே இந்த மசோதா. பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு சட்டமானதும், ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்’ என்ற பெயரில் ஒரே அமைப்பாக செயல்படும்.

மூன்று கவுன்சில்கள்

அதாவது கல்லுாரிகளை துவங்க, புதிய பாடங்களை அறிமுகப்படுத்த இனி தனித்தனியாக அனுமதி கோரி அலைய வேண்டாம். உயர் கல்வித் துறையில் இருக்கும் பல கட்டுப்பாட்டு அமைப்புகளின் வேலைகளை, விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் என்ற ஒரே அமைப்பே இனி செய்யப் போகிறது. எனினும், கட்டுக்கோப்பாகவும் எளிய முறையிலும் இயங்கும்.

இந்த அமைப்பில் உயர் கல்வியை வழிநடத்த மூன்று தனித்தனி பிரிவுகள் உருவாக்கப்படும். ஒழுங்குமுறை, தரக்கட்டுப்பாடு, அங்கீகார கவுன்சில்கள் தான் அவை. இதில் ஒழுங்குமுறை கவுன்சில், படிப்புகளுக்கான அனு மதி மற்றும் நிர்வாகத்தை கவனிக்கும். தரக்கட்டுப்பாட்டு கவுன்சில், கல்வித்தரம் மற்றும் பாடத்திட்டங்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும். அங்கீகார கவுன்சில், கல்லுாரிகளின் செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை ஆய்வு செய்யும்.

இந்த மூன்று கவுன்சில்களும் தன்னாட்சி பெற்று இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டத்தின்படி விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் அமைப்பு, கவுன்சில்களுக்கான தலைவர்கள், உறுப்பினர்களை நியமிக்கும்.

மாணவர்களுக்கு பலன்

விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் அமைப்பு மூலம் மாணவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். அதாவது, விரும்பிய பாடங்களை மாற்றி படிக்கும் வசதி, ‘கிரெடிட் டிரான்ஸ்பர்’ முறை அமலுக்கு வரும்.

கல்லுாரிகளின் கல்வி கட்டண முறை வெளிப்படைத்தன்மையாகும். கல்வி கட்டணம், கல் லுாரியில் இருக்கும் வசதிகள், பேராசிரியர்கள் போன்ற விபரங்களை கல்லுாரி நிர்வாகங்கள் பொதுவெளியில் அறிவித்தாக வேண்டும்; ஏமாற்றவே முடியாது.

ஏட்டுக் கல்வி மட்டுமின்றி, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும். தொழிற்சாலைகளுடன் இணைந்து ஆராய்ச்சி செய்து மாணவர்களின் கல்வி அறிவை அதிகபடுத்த வாய்ப்பு கிடைக்கும்.

வெ றும் புத்தகப் புழுக்களாக உருவாக்காமல். வேலைக்கு தேவைப்படும் திறனுடன் மாணவர்களை வளர்க்க முக்கியத்துவம் தரப்படும். பட்டப்படிப்பு முடிப்பதற்குள் ஆறு மாத கால தொழிற்பயிற்சி கட்டாயமாக்கப்படும். இதனால், படித்தும் வேலை கிடைக்கவில்லை என்ற பேச்சு மறையும்.

மாணவர்கள் முன்வைக்கும் புகார்களை களைய, வலுவான மற்றும் வெளிப்படையான நிர்வாக அணுகுமுறை உருவாகும். கல்லுாரி நிர்வாகங்கள் அராஜகத்தில் ஈடுபட்டால், அதை எதிர்த்து மாணவர்கள் எளிதில் முறையிட முடியும்.

இது தவிர, சமூகத்துடன் மாணவர்கள் ஒருங்கிணைய வசதியாக, படிக்கும் போதே சமூகசேவை திட்டங்களில் பங்கேற்பது குறித்து கற்று தரப்படும்.

சுருக்கமாக சொல்வதென்றால், தேசிய கல்வி கொள்கையின் உயிர்நாடியாக விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் அமையும். இதன் மூலம், நம் நாட்டின் உயர் கல்வி நிறுவனங்கள், மக்கள் நலன் சார்ந்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளாக உயரும்.

பேராசிரியர் கணேசன் கண்ணபிரான்,

இயக்குநர், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில்

Source link