சென்னை: ‘கேபிள்’ பதிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கியதாக, சென்னை பி.எஸ்.என்.எல்., நிறுவன முதன்மை பொது மேலாளர் பி.ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பி.எஸ்.என்.எல்., சென்னை வட்டத்தின் முதன்மை பொது மேலாளராக ராஜேந்திரன் இருந்து வருகிறார்.
இவர், கடந்த 2017 – 19ம் ஆண்டு காலக்கட்டத்தில், கேரளா மாநிலம் திரிச்சூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில், முதன்மை பொது மேலாளராக பணியாற்றிஉள்ளார்.
அப்போது, கேரளாவில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில், பூமிக்கு அடியில் தொலைத்தொடர்பு கேபிள் பதிப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டது. அதில் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
அதனால், அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்; தற்போது, சென்னையில் பணியில் உள்ளார்.
கேரளாவை சேர்ந்த ஒப்பந்ததாரரிடம், ராஜேந்திரன் லஞ்சம் வாங்கியதாக, சி.பி.ஐ.,யிடம் புகார் செய்யப்பட்டது.
அதற்கான ஆடியோ பதிவு மற்றும் பணப் பரிவர்த்தனை ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம், சென்னை மற்றும் மதுரையில் உள்ள ராஜேந்திரன் வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அவர் கேரளாவில் பணியாற்றிய அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ராஜேந்திரன், அடுத்த மாதம் பணி ஒய்வுபெற உள்ளார்.
