பெங்களூரு: பெங்களூரில் இருந்து நேபாளத்துக்கு புறப்பட்ட, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம், காத்மாண்டுவில் தரையிறங்காமல், இரண்டு நாட்களாக அலைக்கழித்ததால், கொதிப்படைந்த பயணியர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நேற்று மதியம் மாற்று விமானம் மூலம் காத்மாண்டு சென்றடைந்தனர்.
கர்நாடகாவின் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேபாள நாட்டின் காத்மாண்டுவுக்கு, பிப்., 26ம் தேதி காலை 10:30 மணிக்கு கோலார் மாவட்டத்தின், 32 பயணியர் உட்பட 170 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.
மோசமான வானிலை பெங்களூரில் இருந்து காத்மாண்டுவுக்கு நான்கு மணி நேர பயணம். இந்த நான்கு மணி நேர விமான பயணம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணியருக்கு, தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது. 26ம் தேதி காத்மாண்டுவுக்கு சென்ற விமானத்திற்கு, அங்கிருந்த மோசமான வானிலை காரணமாக தரையிறங்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால், மீண்டும் பெங்களூருக்கே திரும்பியது. அதற்கான காரணம், பயணியருக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, பிப்., 27ம் தேதி காலை மீண்டும் காத்மாண்டுவுக்கு வேறு விமானம் புறப்பட்டது. மீண்டும் அங்கு அதே நிலை ஏற்பட்டது.
காத்மாண்டுவில் வானிலை மோசமாக இருந்ததால், லக்னோவுக்கு விமானம் திருப்பி விடப்பட்டது.
இதனால், கோபம் அடைந்த பயணியர், லக்னோ விமான நிலையத்தின் குடியேற்ற பகுதியில் போராட்டம் நடத்தினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். இதனால், மாற்று விமானம் மூலம், பயணியர் மீண்டும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரண்டு முறை மீண்டும் நேற்று காலை பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மதியம் காத்மாண்டு சென்றடைந்தது. அதுவும் இரண்டு முறை வானத்தில் வட்டமிட்ட பின்னரே தரையிறங்கியது.
கோலாரைச் சேர்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் சுதாகர் கூறுகையில், “விமானம் எதற்காக திருப்பி விடப்பட்டது என்ற காரணத்தை கூட பயணியருக்கு தெரிவிக்கவில்லை. விமானத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ளனர்.
”அவர்களுக்கு தேவையான நேரத்தில் உணவு, தின்பண்டங்களும் தரவில்லை.
”இரண்டு நாட்களில், 30 மணி நேரத்துக்கும் மேலாக விமானத்திலேயே இருந்தோம். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மோசமான நிர்வாகத்தால், எங்களுக்கு, 18 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது,” என்றார்.
