வெற்றிடம் கிடையாது; குழப்பமும் ஏற்படாது: ஈரானில் ஆட்சி அமைக்க பட்டத்து இளவரசர் தயார்

நமது நிருபர்

”கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரானில் இஸ்லாமிய குடியரசின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அங்கு எந்த வெற்றிடமும் கிடையாது. குழப்பமும் ஏற்படாது. ஆட்சி மாற்றத்திட்டம் தயார் நிலையில் இருக்கிறது,” என்று, அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், 50 ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஈரானின் எதிர்காலம் குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருக்கிறார். தன் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு தஞ்சம் புகுந்த போது இவருக்கு வயது 18.

இளவரசர் கூறியதாவது: அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கை, ஈரானில் அதிகமான உயிர்களை பாதுகாப்பதற்கான மனிதாபிமான தலையீடாக இது இருக்கக்கூடும். இது மிகவும் முக்கியமானது. ஈரான் மக்கள் தங்கள் சக்தியை காட்டி இருக்கின்றனர். கடந்த மாதம் நீங்கள் கண்டது போல் தெருக்களில் மக்கள் ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் கோஷமிட்டனர். அந்த மக்களை கமேனி தலைமையிலான ஆட்சியாளர்கள் இத்தனை ஆண்டுகளாக நசுக்கி வைத்திருந்தனர்.

நீங்கள் இந்த ஆட்சியை ஒழித்தால் அணு ஆயுத அச்சுறுத்தல் உட்பட உலகம் எதிர்க்கொண்டுள்ள அனைத்து பிரச்னைகளும் ஒரே நேரத்தில் நீக்கிவிடும். இந்த ஆட்சி இனி இல்லை என்றால், பயங்கரவாதம், அணு ஆயுத அச்சுறுத்தல், பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழல் இவை அனைத்தும் உடனடியாக காணாமல் போய்விடும்.

ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசு செழிக்க, அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஈரானின் ஆட்சியாளர்களுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பொருளாதார தடைகள் மற்றும் ராணுவ தலையீடு மூலம் ஆட்சியின் மீது அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

ஆட்சி வீழ்ந்தால் ஈரான் மக்களுக்கான ஜனநாயக மாற்றத்தை ஆதரிக்க நான் முன் வருவேன். அமெரிக்கா தாக்கினாலும் சரி, ஈரான் மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வார்கள். அத்தகைய தலையீடு ஆட்சியின் வீழ்ச்சிக்கு மட்டுமே உதவும். மக்கள் வெற்றி பெற ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஈரானின் ராணுவம் எதிர்காலத்தை கட்டி எழுப்ப அனைத்து நாடுகளும் உதவ வேண்டும்.

எங்களுக்கு யோசனைகளும், திட்டங்களும் உள்ளன. ஈரான் மிகவும் மிருகத்தனமான சர்வாதிகாரத்தில் இருந்து வெளியே வர வேண்டும். அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் கண்ணியம் உள்ளிட்டவை உறுதி செய்யப்பட வேண்டுமென்றால் வெறும் வார்த்தைகளில் பேசுவது மட்டும் போதாது.

இஸ்லாமிய அரசு தூக்கியெறியப்பட்டால், எதிர்க்கட்சியால் அரசை நடத்த முடியாது என்பதுதான் பலரின் கவலை என்று நான் நினைக்கிறேன். இதற்கு உரிய தீர்வு காண முடியும்.

இவ்வாறு ரெசா பஹ்லவி கூறினார். இந்த பேட்டி கமேனி கொல்லப்படுவதற்கு முன்னதாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குப்பைத்தொட்டிக்கு போகும்!

கமேனி கொல்லப்பட்ட நிலையில் அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் ரெசா பஹ்லவி வெளியிட்டுள்ள பதிவு:
நமது காலத்தின் ரத்தவெறி பிடித்த சர்வாதிகாரி, பல்லாயிரக்கணக்கான ஈரானின் மக்களை கொன்ற கொலையாளி அலி கமேனி, வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டார். அவரது மரணத்துடன், இஸ்லாமிய குடியரசு உண்மையில் அதன் முடிவை எட்டியுள்ளது.
மிக விரைவில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படும்.

கமேனிக்கு வாரிசை நியமிக்க ஆட்சியின் மிச்சமாக இருப்பவர்கள் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் தொடக்கத்திலிருந்தே தோல்வியடையும். அவர்கள் யாரை அவருக்குப் பதிலாக நியமித்தாலும் அவர்களுக்கு சட்டப்பூர்வத்தன்மையோ நீண்ட ஆயுளோ இருக்காது. சந்தேகத்திற்கு இடமின்றி இந்த ஆட்சியின் குற்றங்களுக்கும் உடந்தையாக இருப்பார்கள்.
பல தலைமுறைகளுக்கு பிறகு சுதந்திரமான ஈரான் மீண்டும் அமெரிக்காவுடன் அன்பான உறவுகளை’ மீண்டும் தொடங்கும். ஈரானில் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் எந்த அமைப்பும் கலைக்கப்படாது. அதிகார வெற்றிடமும் இருக்காது. குழப்பமும் இருக்காது. இந்த நோக்கத்துடன் தான், எனது நிபுணர்கள் குழுவினர், ஈரான் செழிப்பு திட்டம் என்ற ஆட்சி மாற்றத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
பல ஈரானியர்கள், சர்வாதிகாரத்தின் துப்பாக்கி தோட்டாக்களை எதிர்கொண்ட போதிலும், இந்த மாற்றத்தை வழிநடத்த என்னை அழைத்துள்ளனர். நாங்கள் முன்னோக்கி செல்லும் பாதை வெளிப்படையானதாக இருக்கும். ஒரு புதிய அரசியலமைப்பு வரைவு செய்யப்பட்டு வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும். அதைத் தொடர்ந்து சர்வதேச மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான தேர்தல் நடைபெறும். ஈரானியர்கள் வாக்களிக்கும்போது, ​​இடைக்கால அரசாங்கம் கலைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

யார் இந்த பட்டத்து இளவரசர்?

* ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி. இவர் 50 ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வருகிறார். அமெரிக்க அரசியல் கட்சியினருடன் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றுடன் நல்லுறவை கொண்டுள்ளார் இவர்.

* இவர் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானின் மதகுரு ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

* ஈரானில் வெளிநாட்டுத் தலையீட்டிற்கு ஆதரவாக ரெசா பஹ்லவி வாதிட்டு வருகிறார். இவர் வெளிநாடுகளில் ஆதரவுகளையும் திரட்டி வருகிறார்.

* இவர் அமெரிக்காவில் போர் விமான விமானியாக ராணுவப் பயிற்சி பெற்று வந்தார். வாரிசு அடிப்படையில் மன்னராக பொறுப்பேற்க வேண்டியவர், அரசியல் தஞ்சம் பெற்று வெளிநாடுகளில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

* தனது தாய்மொழியான பாரசீகத்துடன் கூடுதலாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.

* 1960ம் ஆண்டு பிறந்த இவர், அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த கடைசி ஷா மன்னரின் மூத்த மகன். இஸ்லாமிய புரட்சி ஏற்படுவதற்கு முன்னதாக, பட்டத்து இளவரசராக முடி சூட்டப்பட்டவர்.

* மன்னராட்சி முடிவுக்கு வந்த காலம் முதல் வெளிநாடுகளில் வசிக்கிறார். ஈரானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரம் செய்து வந்த இவர், இப்போது ஆட்சியை ஏற்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Source link