புதுச்சேரி: இளைஞர்களின் கனவை நிறைவேற்றுவதே முதன்மை இலக்கு என புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்றிரவு சென்னை வந்தார். புதுச்சேரியில் இன்று ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். புதுச்சேரியில் உங்க முன்னாடி இருக்குறது ரொம்ப பெருமையா இருக்கிறது.
சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. கடந்த நான்கரை ஆண்டில் வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா உள்ளிட்டவற்றில் புதுச்சேரி சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளது. மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேசம் இணைந்து செயல்பட்டால் சிறந்த மாநிலம் உருவாகும் என்பதற்கு புதுச்சேரி ஒரு எடுத்துக்காட்டு
4 தூண்கள்
புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகள் காலியாக இருந்த அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இரட்டை இன்ஜின் அரசாங்கம் இளைஞர்களின் கனவை நிறைவேற்றியுள்ளது. நாடு முழுவதும் உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த வசதிகள் மக்களின் வாழ்க்கையை நேரடியாக மேம்படுத்துகின்றன. தொழில், கல்வி, ஆன்மிகம் மற்றும் சுற்றுலா ஆகிய நான்கு தூண்களை உள்ளடக்கிய பெஸ்ட் புதுச்சேரி என்ற எனது கனவு, கடந்த நான்கரை ஆண்டுகளில் நல்ல பலனை அளித்து வருகிறது.
ரூ.12 லட்சம் கோடி
உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளோம். இதனால் புதுச்சேரிக்கு பலன் கிடைத்துள்ளது. வலிமையான இளைஞர்களே நமது வளர்ச்சிக்கு அடிப்படை. இதுவரை இல்லாத அளவுக்கு புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இளைஞர்களின் கனவை நிறைவேற்றுவதே முதன்மை இலக்கு.
புதுச்சேரியில் சுற்றுச்சூழல் மாசை குறைப்பதில் மின் வாகனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. மாநில அரசின் முயற்சிகள் மக்களின் வாழ்க்கையை வளமானதாக மாற்றி வருகின்றன. அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்கிறோம்.
ஆரோக்கியம்
மக்களின் ஆரோக்கியமே இந்த அரசின் பிரதான குறிக்கோள்களில் ஒன்று. மக்கள் நன்றாக இருந்தால்தான் நாடு முன்னேற முடியும். புதுச்சேரி மருத்துவ சுற்றுலா மையமாக மாறி வருகிறது. கிராமப்புற, நகர்ப்புற சாலை வசதி மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு 2 மணி நேரத்துக்குள் செல்ல போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசால் புதுச்சேரி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
குடும்ப ஏடிஎம்
ஊழல், குற்றங்கள் நடந்ததால் நிலைமை மோசம் ஆனது. புதுச்சேரியை திமுக- காங்கிரஸ் கூட்டணி நாசப்படுத்தியது. டில்லியில் உள்ள ஒரு குடும்பத்தின் ஏடிஎம்ஆக புதுச்சேரியை காங்கிரஸ் மாற்றியது.
வளர்ச்சிக்கு காங்கிரசும், திமுகவும் வேகத்தடையாக உள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென அந்தக் கட்சிகள் துடிக்கின்றன.புதுச்சேரியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதை அனுமதிக்க மாட்டோம். 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த புதுச்சேரியை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
