கோல்கட்டா: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் சேர்த்தது.
சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் சேஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
வழக்கமாக அதிரடி காட்டும் இருவரும், இந்திய அணி பவுலர்களுக்கு எதிராக ரன் குவிக்க திணறினர். இதனால், பவர் பிளே முடிவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 45 ரன் சேர்த்தது. இரண்டு முறை விக்கெட் வாய்ப்புகள் கிடைத்தும், மோசமான பீல்டிங்கால் இந்திய அணி வீரர்கள் அதனை தவறவிட்டனர்.
33 பந்துகளில் 32 ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோப், வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்டானார். மறுமுனையில் சேஸ் அதிரடியாக ஆடி ரன் சேர்க்கையில், களம் வந்த உடனே ஹெட்மயரும் அதிரடி காட்டத் துவங்கினார். இருவரும் சேர்ந்து அணியின் ரன் கணக்கை அதிகரிக்கச் செய்தனர். 12 பந்துகளில் 27 ரன் குவித்த ஹெட்மயர், பும்ரா பந்தில் கீப்பர் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதே ஓவரில் சேஸூம் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரூதர்போர்டும் 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பிறகு, 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பவல் மற்றும் ஹோல்டர் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இருவரும் சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவல் (34), ஹோல்டர் (37) ரன் எடுத்திருந்தனர். இதனால், 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
