கொல்கட்டா: ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் இன்று இந்தியா அசத்தினால், அரையிறுதிக்கு முன்னேறலாம்.
இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. ‘பிரிவு-1’ல் முதலிடம் பெற்ற தென் ஆப்ரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் ‘சூப்பர்-8 போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
பாண்ட்யா பலம்: இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக சாம்சன், அபிஷேக் சர்மா (55 ரன்) நல்ல துவக்கம் தந்தனர். இஷான் கிஷான் (6 போட்டி, 214 ரன்), கேப்டன் சூர்யகுமார் (213 ரன்), திலக் வர்மா நல்ல ‘பார்மில்’ உள்ளனர். கடைசி கட்டத்தில் ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே அதிரடியாக ரன் சேர்ப்பது பலம். இவர்களது விளாசல் இன்றும் தொடரலாம்.
தடுமாறும் வருண்: ஈடன் கார்டன் ஆடுகளத்தில் லேசான புற்கள் காணப்படுவதால், பும்ரா, அர்ஷ்தீப் சிங், பாண்ட்யா அடங்கிய ‘வேக கூட்டணி’ மிரட்டலாம். இவர்களது 12 ஓவர், போட்டியின் போக்கை தீர்மானிக்கும். சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி தடுமாறுகிறார். இவரது பந்துகளை தென் ஆப்ரிக்காவின் மில்லர், பிரவிஸ் விளாச, 4 ஓவரில் 47 ரன் வாரி வழங்கினார். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் சிக்கந்தர் ராசா விளாச, 4 ஓவரில் 35 ரன் விட்டுக் கொடுத்தார். இவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம். இருப்பினும் பிரிமியர் தொடரில் கொல்கட்டா அணிக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் அதிக போட்டிகளில் விளையாடியிருப்பது வருணுக்கு சாதகம். ஷிவம் துபேவும் ரன்னை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார். ஜிம்பாப்வேக்கு எதிராக 4 வைடு, 2 நோ-பால் உட்பட 2 ஓவரில் 46 ரன் வழங்கினார். இன்று இவர் சுதாரிக்க வேண்டும்.
அதிரடி ‘பேட்டிங்’: வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணிச்சலான ‘பேட்டிங்’, இந்திய பவுலர்களுக்கு சவாலாக இருக்கும். தொடர்ந்து 5 போட்டிகளில் வென்றது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘சூப்பர்-8’ போட்டியில் சறுக்கியது. இதில் 11 ஓவரில் 83/7 ரன் எடுத்து தத்தளித்தது. 9வது இடத்தில் வந்த ரொமாரியோ ஷெப்பர்டு அரைசதம் விளாச, 20 ஓவரில் 176/8 ரன்னை எட்டியது. இது பேட்டிங் பலத்தை சுட்டிக்காட்டியது. ஹெட்மெயர் 3வது இடத்தில் களமிறங்கி சிக்சர்களாக விளாசுகிறார். ஜிம்பாப்வேக்கு எதிராக 34 பந்தில் 85 ரன் எடுத்தார். பிரண்டன் கிங், கேப்டன் ஷாய் ஹோப், பாவெல், ஜேசன் ஹோல்டர் என பேட்டிங் படை நீள்கிறது. ‘வேகத்தில்’ அசத்த மாத்யூ போர்டு உள்ளார். ‘பவர் பிளே’ ஓவரில் அசத்தும் ‘ஆப்-ஸ்பின்னர்’ அகீல் ஹூசைனை சேர்க்க வாய்ப்பு உண்டு.
ஞாபகம் வருதே
கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘டி-20’ உலக கோப்பை (2016) வென்ற அனுபவம் வெஸ்ட் இண்டீசிற்கு உண்டு. அப்போது மும்பையில் நடந்த அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தியது. ஈடனில் நடந்த பைனலில் டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தை சாய்த்து, சாம்பியன் பட்டம் வென்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பயிற்சியாளராக டேரன் சமி அவதாரம் எடுத்துள்ளார். இம்முறை ‘சூப்பர்-8’ சுற்றிலேயே இந்திய அணியை சந்திக்க உள்ளார். ‘இந்திய அணியின் சவாலை சமாளிக்காமல் யாரும் உலக கோப்பையை வெல்ல முடியாது’ என இத்தொடர் துவங்கும் முன் சமி குறிப்பிட்டார். இவரது வார்த்தைகளுக்கு ஏற்ப இன்று இரு அணிகளும் மோத உள்ளன.
இதுவரை மோதல்
கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏற்கனவே மோதிய 4 ‘டி-20’ போட்டிகளிலும் (2018- 2022) இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
* ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் 4 முறை மோதின. இதில் இந்தியா 1, வெஸ்ட் இண்டீஸ் 3ல் வென்றன.
* ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.
* கோல்கட்டாவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
