மதுரை: மதுரையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில், 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

மதுரை: மதுரையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில், 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது, மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு மும்மடங்கு அதிகரித்துள்ளதாக மோடி குறிப்பிட்டார். மேலும், முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, பிரதமர் மோடி நேற்று முன்தினம் வருகை தந்தார். சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் இரவு தங்கிய பிரதமர் மோடி, நேற்று காலை புதுச்சேரி சென்றார். அங்கு நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, 2,714 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து பேசினார். பின்னர் மதுரை புறப்பட்டு சென்றார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தார்.

விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். பிரதமர் மோடி பேசியதாவது: மதுரை வருவதை கவுரவமாகக் கருதுகிறேன். மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு வணக்கம். 12 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பிரிவில், மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. 2014 முதல், 4,000 கி.மீ.,க்கு அதிகமாக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள மரக்காணம் – புதுச்சேரி நான்கு வழிச்சாலை திட்டம் மூலம், சுற்றுலா, வர்த்தகம், பொருளாதாரம் வளம் பெறும். பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம், ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு புனிதப் பயணம் செல்வோருக்கும், வேளாண், கடல்சார் பொருட்கள் போன்ற வர்த்தகத்திற்கும் உதவும்.

கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே துறை சரித்திர மாற்றத்துடன், நவீன, திறன்மிகு, மக்கள் சார்ந்த போக்குவரத்து துறையாக உருமாறியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் இம்மாற்றம் நன்கு புலப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டில் பா.ஜ., அரசு வந்த பின், தமிழகத்திற்கான நிதி ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. 2009 – 14 வரை பட்ஜெட்டில், 880 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது; 2026 – 27ல் இது, 7,600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 1,300 கி.மீ.,க்கு அதிகமாக புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 97 சதவீதம் மின்மயமாக்கல் எட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதி 100க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

கடந்தாண்டு தமிழகத்தில் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டது. நாட்டின் முதல் செங்குத்து கடல் துாக்கு பாலம் என்ற வகையில், பொறியியல் சிறப்பு தன்மைக்கு அடையாளமாக விளங்குகிறது. இப்பாலம் மட்டுமே சுற்றுலா பயணியரை பெருமளவில் ஈர்க்கிறது.

தமிழகத்தில் ஒன்பது வந்தே பாரத், ஒன்பது அம்ரித் பாரத் ரயில்கள் சேவையாற்றி வருகின்றன. இதற்கான நவீன பெட்டிகள், சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. ‘மேக் இன் இந்தியா’ மூலம் மத்திய அரசு தற்சார்பை ஊக்கப்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் அடையாளத்தை ஒன்றிணைக்கும் வகையில், 77 ரயில்வே ஸ்டேஷன்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுதும், எட்டு புனரமைக்கப்பட்ட ஸ்டேஷன்கள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை பீச் – எழும்பூர் இடையே நான்காவது பாதை, சென்னை மக்களுக்கு ஆதரவாக இருக்கும்.

புல்லட் ரயில்

தமிழக உள்கட்டமைப்புக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. 2026 பட்ஜெட்டில், தமிழகம் மீது கவனம் செலுத்தப்பட்டு, பெங்களூரு – சென்னை – ஹைதராபாத் இடையே, ‘புல்லட் ரயில் காரிடர்’ திட்டம் முன்மொழியப்பட்டு உள்ளது.

வளமான வரலாறு, மரபுக்கு சொந்தமான தமிழகத்தின் ஆதிச்சநல்லுார் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், உலகளாவிய மரபுசார் இடங்களாக மேம்படுத்தப்படும். பழவேற்காடு ஏரி, பொதிகை மலைப்பகுதிகளை சுற்றி எடுக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல், சுற்றுலா முன்னெடுப்புகள் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், இயற்கை சூழலை பாதுகாக்கவும் உதவும்.

நாடெங்கிலும் தொழில் துறை தொகுப்புகள் இனங்காணப்பட்டு, தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ஆதரிக்கப்படும். தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் இருப்பதால், இத்திட்டம் இங்குள்ள இளைஞர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

நாட்டுக்கான வளர்ச்சி

வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் உணர்வால், ஒவ்வொருவரும் உந்தப்பட்டுள்ளனர். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில், தமிழகத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. எனவே, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அமைக்க, மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய, மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர் வேலு, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

என்னென்ன திட்டங்கள்?

* 2,157 கோடி ரூபாயில் மரக்காணம் – புதுச்சேரி, 1,853 கோடி ரூபாயில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையேயான நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல்
* அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்துார், மணப்பாறை, காரைக்குடி, பொள்ளாச்சி, பொம்மிடி, மொரப்பூர், திருவாரூர் ஆகிய எட்டு ரயில்வே ஸ்டேஷன்கள் திறப்பு
* கும்பகோணம், ஏற்காடு, வேலுாரில் ஆகாஷவாணியின் எப்.எம்., ஸ்டேஷன்கள் துவக்கம்
* 378 கோடி ரூபாயில் சென்னை பீச் – எழும்பூர் இடையிலான 4.3 கி.மீ., நான்காவது புதிய ரயில் பாதை அர்ப்பணிப்பு.

திருப்பரங்குன்றம் முருகனை மனமுருகி வழிபட்ட மோடி

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், தமிழக அரசு மறுத்ததால் போராட்டம் வெடித்தது. உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி, பார்லிமென்டில் தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீது விவாதமும் நடந்தது.

டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்களும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போதே, விரைவில் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரையில் தே.ஜ., கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு நேற்று வந்த பிரதமர், திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றார்.

காவி சால்வை, வெள்ளை வேட்டி அணிந்து மாலை 4:12 மணிக்கு கோவிலுக்கு, வந்த மோடிக்கு, மேள தாளத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பும், பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. நேரடியாக மூலஸ்தானத்திற்கு சென்ற மோடி, குன்றத்து குமரனை மனமுருகி வழிபட்டார். அவரது பெயரில் பட்டர்கள் அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கினர்.

தரிசனம் செய்து திரும்பிய போது, கொடிமரம் இருக்கும் மண்டபத்தில் பிரதமர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். கோவில் நிர்வாகம் தரப்பில், அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் இருந்து மாலை 4:32 மணிக்கு புறப்பட்டார்.

 ‘தமிழகத்தில் இருண்ட ஆட்சியை அகற்ற மோடி வந்துள்ளார்’

மதுரையில், நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ‘தமிழகத்தில் நிகழும் இருண்ட ஆட்சியை அகற்றவே பிரதமர் மோடி வந்துள்ளார்’ என, அந்த கூட்டணி யின் கட்சி தலைவர்கள் பேசினர்.

முடக்க நினைத்தனர்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., அரசு, குண்டாறு திட்டம், மதுரை விமான நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை முடக்கி வைத்துள்ளது. தென் மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை தந்திருக்கிறோம். ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவ கல்லுாரிகளை மத்திய அரசின் உதவியோடு பெற்றோம். இன்று தி.மு.க., அரசால் ஒரு மருத்துவ கல்லுாரியை கூட பெற முடியவில்லை. தி.மு.க., அரசு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தையும் முடக்க நினைத்தது. வலிமையான பாரதம், வளமான தமிழகத்தை உருவாக்க தே.ஜ., கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

பாலியல் கொடுமை

பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன்: தமிழகத்தில், 2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பாலியல் கொடுமைக்கு ஆளாகும் ஆட்சியாக தி.மு.க., ஆட்சி உள்ளது. துணை முதல்வர் உதயநிதியை முதல்வராக்க இந்த தேர்தலை பயன்படுத்துகின்றனர். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போட்டியே இந்த தேர்தல்.

முடிசூட்ட திட்டம்

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: மதுரை என்றாலே பாண்டியர்கள் தான் நினைவுக்கு வருவர். களப்பிரர்களை வீழ்த்தி, மதுரையை மீட்டெடுத்த பாண்டியனாக பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். இருண்ட ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. ஏழை மக்களை எப்படியாவது விலை கொடுத்து வாங்கி விடலாம்; உதயநிதிக்கு முடிசூட்ட வேண்டும் என, கங்கணம் கட்டிக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இந்த ஆட்சியை அகற்ற, பிரதமர் மோடிக்கு உறுதுணையாக இருப்போம்.

பொய் சொல்கிறார்

பா.ம.க., தலைவர் அன்புமணி: தி.மு.க., அரசு எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி ஐந்து ஆண்டுகளில் சமூகநீதியை குழி தோண்டி புதைத்து விட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பலமுறை முதல்வரிடம் நான் கோரிக்கை விடுத்தும், அதை நிறைவேற்ற மறுக்கிறார். கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரமில்லை என, சட்டசபையில் ஸ்டாலின் பொய் சொல்கிறார். இவ்வாறு பேசினர்.

Source link