துபாய்: ஈரானின் ஏவுகணை தாக்குதலால் துபாயின் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், நாளொன்றுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசியா முழுதும் பதற்றம் நிலவி வருகிறது.
குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் மீது ஏவுகணை வீசி ஈரான் தாக்கியது. அங்குள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபா அருகே ஏவுகணை வீசியது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையம் நாளொன்றுக்கு, 2,60,000 பயணியரை கையாள்கிறது. இந்த அளவுக்கு அதிகளவில் பயணியரை கையாள்வதால், விமான நிலையம் சார்ந்த வருவாய் மற்றும் சுற்றுலா மூலம் வரும் வருவாய் துபாய்க்கு அதிகரித்து வந்தது. இந்த சூழலில், விமான நிலையம் மூடப்பட்டதால், நாளொன்றுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
துபாயை பொறுத்தவரை விமான போக்குவரத்து ஒரு துறை அல்ல; அந்நாட்டின் முதுகெலும்பு. கடந்த, 2023ம் ஆண்டின் புள்ளி விபரத்தின்படி, துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விமானப் போக்குவரத்து துறையின் பங்களிப்பு மட்டும், 27 சதவீதம். அதாவது, 3.37 லட்சம் கோடி ரூபாய். இதனால், 6.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்போது ஏற்பட்டுள்ள முடக்கத்தால், இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
சர்வதேச நாடுகளின் வர்த்தக தலைநகராகவும், பொருளாதார இன்ஜினாகவும் ஓடிக்கொண்டிருக்கும் துபாய் விமான நிலையம், தற்போது முடங்கியுள்ளதால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்படலாம் என, அஞ்சப்படுகிறது. தவிர, வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
