திருவனந்தபுரத்தில் உள்ளது போல, சாலையோர வியாபாரிகளுக்கு ‘பி.எம்.ஸ்வநிதி’ திட்டம் தமிழகத்திலும் உள்ளதா? இருந்தால் எவ்வாறு பெறுவது?
– கே. வனிதா, வாட்ஸாப்
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தும் பி.எம்.ஸ்வநிதி திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால், இது கேரளா மட்டுமல்ல; தமிழகத்திலும் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் தற்போது 2024க்கு பிறகும் நீட்டிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
முன்னர் முதல் கடன் தொகை 10,000 ரூபாயாக இருந்தது; தற்போது 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முறையாக கடனை கட்டுபவர்களுக்கு தரப்படும் இரண்டாவது கடன் 20,000 இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கடனை முறையாகச் செலுத்தியவர்கள், 50,000 ரூபாய் வரை மூன்றாவது கடன் பெறலாம்.
கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தினால், ஒவ்வொரு காலாண்டும் 7 சதவீத வட்டி மானியம் உரியவர் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வங்கி கடன் பெறுவதற்கு சாலையோர வியாபாரி என்பதற்கான ஆதாரம் தேவை. அதற்கு, ‘நகர விற்பனையாளர் சான்றிதழ்’ அல்லது அடையாள அட்டை மிக முக்கியம். கூடுதல் விபரங்களுக்கு https://www.pmsvanidhi.mohua.gov.in/ என்ற தளத்துக்கு செல்லுங்கள்.
நான் கடந்த இரு வாரங்களுக்கு முன், ஒரு ஜுவல்லரியில் என் மனைவியின் பழைய தங்கச் செயினை கொடுத்து அதே எடையில் புதிய செயின் வாங்கினேன். பழைய செயின் 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கியது; அதற்கான ரசீது கிடைக்கவில்லை. புதிய செயினை வாங்குவதற்கு கொஞ்சம் கூடுதல் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அந்த தொகையை கிரெடிட் கார்டில் செலுத்தினேன். என் சந்தேகம் என்னவெனில், பழைய செயினை விற்றதற்காக நான் நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டுமா?
– கே.வைத்தியநாதன், சென்னை
ஆம், தங்கத்தை விற்றதும், புதிய நகை வாங்கியதும் இரண்டு வேறு வேறு பரிவர்த்தனைகள். இதில், தங்கத்தை விற்பனை செய்ததில் பெற்ற லாபத்துக்கு நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். பழைய தங்கம் விற்பனைக்கு ‘இண்டக்சேஷன்’ பலன் இல்லை.
நீங்கள் நகையை வாங்கிய போது பெற்ற ரசீது இல்லை என்கிறீர்கள். பதினைந்து ஆண்டுகள் என்றால் 2011 வாக்கில் வாங்கியிருப்பீர்கள்.
இதற்கு, 12.50 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.
நீங்கள் தங்கம் விற்ற பணத்தைக் கொண்டு இன்னொரு நகை வாங்கியுள்ளீர்கள். வருமான வரி சட்டப்படி, நகை வாங்குவதற்கு வரி விலக்கு கிடையாது.
ஒருவேளை நீங்கள் தங்கம் விற்ற முழுத் தொகையையும் ஒரு புதிய வீடு வாங்கவோ அல்லது கட்டவோ பயன் படுத்தியிருந்தால் மட்டுமே, ‘பிரிவு 54எப்’ கீழ் வரி விலக்கு கோர முடியும். நகை மாற்றும் போது இந்த விலக்கு கிடைக்காது.
இ.டி.எப்., முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று எழுதியுள்ளீர்கள். அதை பற்றி கொஞ்சம் விளக்குங்கள். என் வயது 70. எனக்கு அது பொருந்துமா?
– சாந்தா சுப்பிரமணியம், வாட்ஸாப்
உங்களுக்கு இ.டி.எப்., முதலீடு வேண்டாம். விபரம் தெரிந்துகொள்ளும் உங்களுடைய ஆசையை நான் தடுக்கவில்லை. பங்கு சந்தையின் பல்வேறு இண்டக்ஸ்கள் சார்ந்தோ, தங்கம், வெள்ளி சார்ந்தோ தான் இ.டி.எப்.கள் உள்ளன.
இவற்றில் உள்ள ஏற்ற இறக்கங்கள் உங்கள் மனதுக்கு உவர்ப்பாக இருக்குமா, நிம்மதி அளிக்குமா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை.
முதலீடு செய்த பணத்துக்கு ஒரு குறிப்பிட்ட நிரந்தர வருவாய் வேண்டும் என்று எதிர்பார்க்கும் வயது உங்களுடையது. அதனால், வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புகளில் முதலீடு செய்யுங்கள்.
ஒருவருடைய மறைவுக்கு பின், வாரிசு உரிமையாக வருகிற சேமிப்பு தொகையை பெறுகிறவர்களின் வருமானமாக கணக்கிடப்பட்டு, அதற்கும் வருமான வரி கணக்கிடப்படுமா? மறைந்தவர் வருமான வரி கட்டியிருப்பாரே?
– சுப்ர.பாலன், சென்னை
நீங்கள் சொல்வது சரிதான். வாரிசு உரிமையின் அடிப்படையில் வங்கி சேமிப்போ, வைப்பு தொகையோ, பங்கு சந்தை முதலீடுகளோ, ஆயுள் காப்பீட்டு தொகையோ, அசையா சொத்துகளோ வாரிசுகளுக்கு வருமானால், அதை அவர்கள் ‘வருமானம்’ என்று காட்டி வரி செலுத்த வேண்டியது இல்லை.
இந்தியாவில் வாரிசு உரிமையாக பெறப்படும் சொத்துகளுக்கு தனியாக ‘இன்ஹெரிடன்ஸ் வரி’ அல்லது ‘எஸ்டேட் வரி’ தற்போது இல்லை.
வருமான வரி சட்டப்படி, மறைந்தவரின் சட்டப்பூர்வ வாரிசு, அவர் மரணமடையும் தேதி வரை உள்ள வருமானத்திற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டிய பொறுப்பு உடையவர்.
அவர் ஏற்கனவே செலுத்திவிட்டார் என்றால், வாரிசுகளுக்கு எந்த சிக்கலும் இல்லை.
மறைந்தவர் கொடுத்துவிட்டு போகும் ‘அசல்’ தொகைக்கு தான் வரி இல்லை. ஆனால், அந்த பணத்தை வங்கியில் போட்டு வைத்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டியானது, வாரிசுகளின் வருமானமாக கருதப்படும். அதற்கு அவர் வரி செலுத்த வேண்டும்.
அதேபோல், வாரிசு உரிமையாக கிடைக்கும் பங்கு அல்லது அசையா சொத்தை பின்னர் விற்பனை செய்யும் போது, வாங்கிய மதிப்பின் அடிப்படையில் மூலதன ஆதாய வரி கணக்கிடப்படும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ—மெயில்’ மற்றும் ‘வாட்ஸாப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல்
வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
*************@***il.com%20″>pa*************@***il.com ph: 98410 53881
