சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று தன் 73வது பிறந்த நாளையொட்டி, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்கள், ஈ.வெ.ராமசாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை கோபாலபுரத்தில் தன் தாய் தயாளுவிடம் ஆசி பெற்றார். குடும்பத்தினர் மற்றும் பள்ளி குழந்தைகளுடன், முதல்வர் ஸ்டாலின் ‘கேக்’ வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கவர்னர் ரவி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நடிகர் ரஜினி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காலையிலேயே ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டதோடு, போனிலும் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், தி.மு.க., மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களுக்கு, துண்டு, தொப்பி, அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகம், பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
