புதுடில்லி: இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, டில்லியில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள்

புதுடில்லி: இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, டில்லியில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர். பின்னர், ”மேற்கு ஆசியாவின் நிலைமை எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. மோதலை தீர்க்க இந்தியா ஆதரவாக இருக்கும” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் மார்க் கார்னி வந்து உள்ளார். மும்பையில் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகளை மார்க் கார்னி சந்தித்தார். டில்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை இன்று கனடா பிரதமர் சந்தித்து பேச்சு நடத்தினார்.

வர்த்தகம், எரிசக்தி, கனிமங்கள், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

Image 1543234

பிரதமர் மோடி கூறியதாவது: பிரதமர் மார்க் கார்னியை இந்தியாவிற்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமராக அவர் இந்தியாவிற்கு வருவது இது முதல் முறை. இதை நாங்கள் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதுகிறோம். கடந்த ஆண்டு கனடாவில் நடந்த ஜி7 கூட்டத்தில் என்னையும் எனது குழுவினரையும் அவர் அன்புடன் வரவேற்றார். இன்றும் அதே அன்புடன் அவரை வரவேற்பது ஒரு பாக்கியம். இந்தியாவும் கனடாவும் யுரேனியம் தொடர்பான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

கவலை அளிக்கிறது

இந்தியாவும் கனடாவும் இணைந்து செயல்படும். மேற்கு ஆசியாவின் நிலைமை எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அனைத்து மோதல்களையும் தீர்க்க இந்தியா ஆதரவளிக்கிறது.

மேற்கு ஆசியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அங்குள்ள நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். பயங்கரவாதம் இந்தியாவிற்கும், கனடாவிற்கும் மட்டுமல்ல, மனிதகுலம் முழுவதற்கும் கடுமையான சவால்கள் ஏற்படும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

50 பில்லியன் டாலர் இலக்கு

யுரேனியம் விநியோகம் மற்றும் சிறிய ரக அணு உலைகள் அமைப்பதில் இந்தியாவும், கனடாவும் இணைந்து செயல்பட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. கனிமவள தாதுக்கள் விநியோகத்திலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை 2030ம் ஆண்டிற்குள் 50 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு, கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் கீழ், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. தனிநபர் வருமானம் வரலாற்றில் இதுவரை கண்டிராத வேகத்தில் உயர்ந்துள்ளது. இந்தியா- கனடா இடையேயான உறவுகள் வளர்ச்சியை கண்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, என்றார்.

Image 1543235

வரவேற்பு

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, அவரது மனைவி டயானா ஆகியோருக்கு, ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி மற்றும் குடும்பத்தினர், மும்பையில் உள்ள தங்கள் வீட்டில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர்.

Source link