“திருப்பரங்குன்றத்தில் பதற்றம் அதிகரித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இந்நடவடிக்கை பெரிய அளவிலான மோதலைத் தடுக்க உதவியது” – மாவட்ட ஆட்சியர்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் சத்திய பிராமண மனு (Affidavit) தாக்கல் செய்துள்ளார்.
அதில், “பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்பாக சமூக பதற்றம் அதிகரிக்கும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நகர காவல் ஆணையர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்தார். திருப்பரங்குன்றம் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பதற்றத்தால் நகர காவல் ஆணையர் கேட்ட ந் பெயரிலேயே பேருந்து நிலையம், சன்னதி தெரு, மலை நுழைவாயில், காசி விஸ்வநாதர் கோவில் நுழைவாயில், வி1 காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டது.
திருப்பரங்குன்றம் முக்கியமான மதத்தலம். கார்த்திகை தீபத் திருவிழா நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். குறுகிய வீதிகளில் கிரிவலம் நடைபெறும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பதற்றம் அதிகரித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் பெரிய அளவிலான மோதலைத் தடுக்க உதவியது.
திருப்பரங்குன்றம் மலை அடிவாரப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பொது அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மட்டுமே தடை உத்தரவு பிறப்பித்தேன். பொது அமைதிக்குக் குழப்பம் விளைவிக்கும் சூழ்நிலை இருந்ததால் உடனடி நிர்வாக தலையீடு வேண்டுமென கருதினேன்.
பிரச்சனையை தீர்ப்பதற்காக தற்காலிக நடவடிக்கையாகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுகளை மீற வேண்டும் என்ற நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை.
நீதிமன்ற உத்தரவுகள் மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும் என்பதை அறிவேன். அவற்றை மீற வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை.
அவசர சூழ்நிலையில் பொது ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறியதாக கருதப்பட்டால், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார். எனவே இந்த விளக்கத்தை பதிவு செய்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
