கொல்கட்டா: ”கடந்த இரு மாதம் இந்தியாவில் விளையாடிய அனுபவம், ‘டி-20’ உலக கோப்பை அரையிறுதியில் சிறப்பாக செயல்பட கைகொடுக்கும்,” என டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ பிரிவு 2ல் இடம் பெற்றது நியூசிலாந்து அணி. 3 போட்டியில் 1ல் வென்றது. 1 போட்டி மழையால் ரத்தாக, 1ல் தோற்றது. 3 போட்டியில் 3 புள்ளி மட்டும் பெற்ற போதும், ‘ரன் ரேட்’ அடிப்படையில் பாகிஸ்தானை (3 புள்ளி) பின்தள்ளி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இதில் தென் ஆப்ரிக்காவை நாளை (கொல்கட்டா) எதிர்கொள்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் (ஆமதாபாத்) தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது நியூசிலாந்து.
நியூசிலாந்து அணி கேப்டன் டேரில் மிட்செல் கூறியது:
உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற, எங்களுக்கு எந்தளவுக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது என்பதை நினைத்து, உற்சாகமாக உள்ளோம். நாங்கள் தெளிவான திட்டமிடுதலுடன் உள்ளோம்.
போட்டியின் போது, சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி, ஆதிக்கம் செலுத்த முயற்சிப்போம். அடுத்த சில நாட்களில் பைனலுக்கு செல்வோம் என நம்புகிறோம். இலங்கை ஆடுகளங்களை விட, இந்திய மைதானங்கள் வித்தியாசமானவை.
கடந்த இரு மாதங்களாக இந்தியாவில் விளையாடி வருகிறோம். மைதானத்தில் சூழ்நிலை குறித்து எங்களுக்குத் தெரியும்.
தற்போது, தொடரின் சிறந்த அணியை எதிர்த்து விளையாட ஆர்வமாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
