– நமது சிறப்பு நிருபர் -:
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதலால், மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், நம் நாட்டில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம் என்பதால், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில், மேற்காசிய நாடான ஈரான் அடிபணியாததால் கடுப்பான அமெரிக்கா, மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் இணைந்து, அந்நாட்டின் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.
இதில், ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து, நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் போராட்டம் நடந்தது.
இந்நிலையில், மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால், நாட்டில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
அதன் விபரம்:
வன்முறையை துாண்டும் வகையில் உரையாற்றும் மற்றும் ஈரானுக்கு ஆதரவான பயங்கரவாத போக்குடைய மத பிரசாரகர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் துாதரகங்கள் மற்றும் துணை துாதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் சுற்றுலா தலங்கள் மற்றும் யூத வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்
முக்கிய இடங்களில், ‘சிசிடிவி’ கேமராக்களை நிறுவி கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, வெடி பொருட்கள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை தொடர்ச்சியாக சோதனையிட வேண்டும்
ஈரானுக்கு ஆதரவான அமைப்புகள், அல் — குவைதா, ஐ.எஸ்., பயங்கரவாத குழுக்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் சமூக ஊடக செயல்பாடு களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்
அசம்பாவிதங்களை தடுக்கவும், சட்டம் – ஒழுங்கு, பொது அமைதியை பேணவும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக ஊடகங்களை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், 1989-ல், எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின், ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ புத்தகத்திற்கு எதிராக, ஈரான் தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி பிறப்பித்த மரண தண்டனை உத்தரவால், மஹாராஷ்டிராவின் மும்பையில் ஏற்பட்ட வன்முறையில், 12 பேர் பலியான சம்பவத்தையும், 1990ல், குவைத் மீது ஈராக் படையெடுத்த போது, நம் நாட்டில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களையும் உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது.
