புதுடில்லி: ”நிர்வாக அமைப்புகளை எளிமையாக்கவும், கடைக்கோடி மக்களுக்கும் திறம்பட சேவைகளை வழங்குவதை உறுதி செய்யவும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்,” என, புதிதாக பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுரை வழங்கினார்.
தலைநகர் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புதிதாக பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:
வளர்ச்சியின் பலன்கள் மிகவும் நலிந்த மற்றும் பின்தங்கிய பிரிவினரை சென்றடையும் போது தான், வளர்ந்த நாடாக நம் நாடு மாறுவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
புவியியல், சமூக அல்லது பொருளாதார காரணங்களால் எந்தவொரு சமூகமும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய நீங்கள் அயராது பாடுபட வேண்டும்.
தற்போது நீங்கள், மாவட்ட அல்லது மாநில அளவில் பொறுப்புகளை கவனிக்கிறீர்கள். துறை சார்ந்த எல்லைகளை தாண்டி, ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும். இது, நிர்வாகத்தின் செயல்பாட்டை வலுப்படுத்தும்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களான ஏ.ஐ., சார்ந்த தீர்வுகள், டிஜிட்டல் குறைதீர்க்கும் வழிமுறைகள், நிகழ்நேர பகுப்பாய்வு ஆகியவற்றை பயன்படுத்தி, நிர்வாக அமைப்புகளை எளிமையாக்க வேண்டும். இதன் மூலம், கடைக்கோடி மக்களுக்கும் அனைத்து சேவைகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
‘தேசமே முதன்மை’ என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவையே உண்மையான பொது சேவையின் அடிப்படை. மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இவை தான் காப்பாற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
