மதுராபூர்: “மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், ஊடுருவல்காரர்களை

மதுராபூர்: “மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், ஊடுருவல்காரர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்,” என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, தமிழகத்துடன் சேர்த்து விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்., – எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நேற்று நடந்த, பா.ஜ.,வின், ‘பரிவர்த்தன் யாத்திரை’ நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷா பேசியதாவது:

மேற்கு வங்கம், வங்கதேச எல்லையில் உள்ள ஒரு மாநிலம். அதன் பாதுகாப்பை ஆளும் திரிணமுல் காங்கிரசால் உறுதி செய்ய முடியவில்லை. மாநிலத்தை ஊடுருவல்காரர்களின் சொர்க்கமாக அக்கட்சி மாற்றி விட்டது.

சட்ட விரோத குடியேற்றத்தை ஆதரிக்கும் அக்கட்சியால், மாநிலத்தின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.,வால் மட்டுமே மேற்கு வங்கம் போன்ற எல்லையோர மாநிலத்துக்கு பாதுகாப்பை வழங்க முடியும்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின், பட்டியலில் இருந்து மட்டுமே வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. இதற்கே முதல்வர் மம்தா பானர்ஜி பதற்றமடைகிறார்.

வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி.

தேர்தலில் திரிணமுல் காங்கிரசை வெற்றி பெற செய்யக் கூடாது. இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். பா.ஜ.,வை அரியணையில் அமர வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link