மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை மலை உச்சி தீபத்துாண் அருகே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்.
இதுகுறித்த நிலைப்பாட்டை நாளை அரசு தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும்,’ என அந்நீதிபதி உத்தரவிட்டார். மதுரை மாவட்டம் ராம ரவிக்குமார், பரமசிவம், அரசுபாண்டி ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த டிச., 1 ல் பிறப்பித்த உத்தரவில், ”திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்துாணிலும் டிச., 3 ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். 2025 முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை,” என்றார்.
ராம ரவிக்குமார்,’நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,’ என மனு தாக்கல் செய்தார்.
இதை அவசர வழக்காக டிச., 3 ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: உச்சிப் பிள்ளையார் கோயிலில் மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம்.
அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்.,வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்.,கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன் என்றார்.
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு கடந்த டிச., 4 ல் தள்ளுபடி செய்தது.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிச.,4 ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,’கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என்றார்.
பிப்., 2 ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோயில் செயல் அலுவலர் ஆஜராகி, ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு நிபந்தனையற்ற வகையில் வருத்தம் தெரிவிக்கிறோம்,’ என பதில் மனு செய்தனர்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: போலீஸ் கமிஷனர், கோயில் செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது மற்றும் அவர்கள் அடுத்தகட்ட விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. கலெக்டர் மார்ச் 2 ல் ஆஜராக வேண்டும் என்றார்.
கலெக்டர் உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர்
நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் இவ்வழக்கை விசாரித்தார். கலெக்டர் பிரவீன்குமார் ஆஜரானார். பரமசிவம் தாக்கல் செய்த இடையீட்டு மனு: தமிழக அமைச்சர் ரகுபதி. இவர் ஜன., 6 ல் பத்திரிகையாளர் சந்திப்பில்,’ உயர்நீதிமன்ற உத்தரவுப்படி துாணில் தீபம் ஏற்றுவதை தடுக்கவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்படி செய்திருக்காவிடில் அங்கு தீபம் ஏற்றியிருப்பர். அப்படி நடந்திருந்தால் தீபம் ஏற்றுவது வழக்கமாகி விடும்,’ என தெரிவித்தார். இது தினமலர் நாளிதழில் ஜன., 7 ல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இவ்வழக்கில் மற்றொரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிரி, கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராயினர்.
கலெக்டர் தாக்கல் செய்த பதில் மனு: நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கிறேன். திருப்பரங்குன்றத்தில் அதிகம் பேர் கூடினர். சட்டம்-ஒழுங்கு பிரச்னை, எதிர்பாராத நிகழ்வுகளை தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நீதிமன்றம் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. மலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை இல்லாதபோதுதான் கோயில் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயலும். பி.என்.எஸ்.எஸ்.,சட்டப்பிரிவு 163ன்கீழ் நான் பிறப்பித்த தடையுத்தரவு, இந்நீதிமன்றம் டிச.,1 ல் பிறப்பித்த உத்தரவின்படி கோயில் அதிகாரிகள் தீபம் ஏற்றுவதை எவ்விதத்திலும் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இல்லை. தடை உத்தரவை பிறப்பித்ததால் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மீறுவதாக இந்நீதிமன்றம் கண்டறிந்தால், நான் நிபந்தனையற்ற வகையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். டிச., 1 ல் இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற எந்தவித தடையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை என குறிப்பிட்டார்.
நீதிபதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கலெக்டர் படித்திருப்பார். ஏற்கனவே ஏற்றிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என நான் உத்தரவிடவில்லை. ஹிந்துக்களுக்கு சொந்தமான பகுதியான மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் ஏற்ற உத்தரவு பிறப்பித்தேன். அதை நிறைவேற்ற விருப்பம் இல்லாமல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதல்வர் கருத்து தெரிவிக்கவில்லை
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் கார்த்திகேய வெங்கடாஜலபதி, நிரஞ்சன் எஸ்.குமார்: திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சர் ரகுபதியும் அதுபோல் கூறியுள்ளார்.
வீராகதிரவன்: 100 ஆண்டுகள் பாரம்பரியமாக ஏற்றப்படும் இடத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. இச்சூழலில் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமா என கேள்வி எழுப்பப்பட்டதே தவிர, நீதிமன்ற உத்தரவு குறித்து முதல்வர் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
நீதிபதி: முதல்வரின் கருத்திலிருந்து அமைச்சரின் கருத்து மாறுபட்டது. அமைச்சர் கருத்து தவறானது;
கலெக்டர்: அமைச்சரின் கருத்து தவறானது.
நீதிபதி: 5 பேர் மட்டும் மலை உச்சிக்கு சென்று 15 நிமிடம் பூஜை செய்ய அனுமதித்தால் போதுமானது. இவ்வழக்கை முடித்து வைக்கத் தயார். 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்படுகிறது. கலெக்டர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
கலெக்டர்: இது கோயிலுக்கு சொந்தமான சொத்து. அறநிலையத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அவகாசம் தேவை.இவ்வாறு விவாதம் நடந்தது.
பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை மலை உச்சி தீபத்துாண் அருகே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். இது குறித்த நிலைப்பாட்டை நாளை (மார்ச் 4) மாலை 4:00 மணிக்கு அரசு தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும். நாளை போலீஸ் கமிஷனர், கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் ஆஜராக வேண்டும். இவ்வழக்கில் வரும்காலங்களில் கலெக்டர் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அமைச்சர் ரகுபதியின் கருத்து தவறானது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனால் ரகுபதியை இவ்வழக்கில் மற்றொரு எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என தாக்கலான மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
