பிரதமர் கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுத்ததாக தி.மு.க., அரசு மீது குற்றச்சாட்டு

மதுரை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுக்க தி.மு.க., அரசு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது’ என மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார்.

மதுரை மண்டேலா ரிங் ரோடு பகுதியில் நேற்றுமுன்தினம் பிரதமர் பங்கேற்ற தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது. தென் மாவட்டங்களுக்கான முதல் கூட்டம் என்பதாலும், கூட்டணி கட்சியினர் தங்கள் பலத்தை காட்டவும் ஆயிரக்கணக்கானோரை வாகனங்களில் வரவழைத்தனர். இதற்காக ரிங் ரோடு தனியார் ஓட்டல் அருகே ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் போலீஸ் கெடுபிடி காரணமாக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு தொண்டர்களும், மக்களும் வரமுடியவில்லை.

பிரதமர் வருவதற்கான நேரம் நெருங்க, தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரான பியூஷ்கோயல் ‘டென்ஷன்’ ஆனார். ‘பார்க்கிங்’ இடத்திற்கே சென்ற அவர், போலீசாரிடம் ‘ஏன் இவ்வளவு கெடுபிடி’ என கேட்டார். அதை தொடர்ந்து அவரே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி ‘பார்க்கிங்’கில் நிறுத்த ஏற்பாடு செய்தார்.

அப்போது நெரிசலில் சிக்கி காரில் வந்த பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி, ‘பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் இருக்க வேண்டியவர், இங்கே இருக்கிறாரே’ என அதிர்ச்சியடைந்து இறங்கி நடந்து வந்தார். அவரிடம் பியூஷ்கோயல் ‘நாம எல்லாம் வி.ஐ.பி., கிடையாது’ என கோபமாக கூற, வானதி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

பொதுக்கூட்டம் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், ‘பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுக்க தி.மு.க., அரசு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. 15 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு இருந்தது. போலீசார் ஒத்துழைக்கவில்லை. நான் நேரில் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது’ என குற்றஞ்சாட்டினார்.

Source link