பெய்ரூட்: மேற்காசிய நாடான ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் இருந்து இயங்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பு, இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு தளத்தை குறிவைத்து ஏவுகணைகளை ஏவி நேற்று தாக்குதல் நடத்தியது.
கடந்த 2024ம் ஆண்டு போர் நிறுத்தத்துக்கு பின், இஸ்ரேல் மீது ஹெஸ்பொல்லா நடத்திய முதல் நேரடி தாக்குதல் இது.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பொல்லா கோட்டையான தஹியே மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் கடுமையான தாக்குதலை நடத்தியது.
இத்தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்; 149 பேர் காயமடைந்தனர். பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளிலும் 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன.
இத்தாக்குதலில், ஹெஸ்பொல்லாவின் பார்லிமென்ட் குழு தலைவர் முகமது ராத் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹெஸ்பொல்லா தலைவர் நாயிம் காசிம் தற்போது இஸ்ரேலின் நேரடி இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஹெஸ்பொல்லாவின் தாக்குதலை லெபனான் பிரதமர் நவாப் சலாம் கண்டித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் இத்தகைய பொறுப்பற்ற செயல்களை அரசு அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.
