ஏ.ஐ., முறையில் உருவாக்கிய தீர்ப்புகளை வழக்கு விசாரணையில் சுட்டிக்காட்டுவதா?: வழக்கறிஞர்களை விளாசிய உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: ‘ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட போலி தீர்ப்புகளை, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தவறு மட்டுமல்ல; அப்பட்டமான நடத்தை விதி மீறல்’ என, வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திராவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடந்த சொத்து தகராறு வழக்கில், சில முந்தைய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, கடந்த ஆண்டு ஆகஸ்டில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், அந்த தீர்ப்புகள் இதுவரை எந்த நீதிமன்றத்திலும் வழங்கப்படவில்லை என்பதும், அவை ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு, வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவை என்றும் தெரிந்தது.

இதையடுத்து, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றமும் அந்த தீர்ப்புகள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டவை என்பதை கருத்தில் கொள்ளாமல், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மனுதாரர் கடைசியாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு வந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி தீர்ப்புகளை நம்பி, விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம்.

போலியான மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், இறுதி முடிவு எடுப்பது தவறு மட்டுமல்ல; அப்பட்டமான நடத்தை விதிமீறல்.

ஏ.ஐ., முறையில் தீர்ப்புகளை உருவாக்கி, அதை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சமர்ப்பிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த விவகாரத்தை தீவிரமாக ஆராய விரும்புகிறோம்.

இதுவரை எந்த நீதிமன்றமும் வழங்காத, ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தீர்ப்பு என்பதை கவனத்தில் கொள்ளாமல், உயர் நீதிமன்றம் கோட்டை விட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் இந்திய பார் கவுன்சில் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவ, மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவானை நியமிக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே, கடந்த மாதம் 17ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இதே போன்ற ஒரு வழக்கை விசாரித்தது.

அப்போது ஏ.ஐ., முறையை பயன்படுத்தி வழக்கறிஞர் சிலர், மனுக்களை தாக்கல் செய்வதும், அதில் இல்லாத தீர்ப்புகளை சுட்டிக்காட்டுவதும் கவலை அளிப்பதாக தெரிவித்திருந்தது.

Source link