‘தி வெல்த் மியூச்சுவல் பண்டு’ எனும் புதிய மியூச்சுவல் பண்டு நிறுவனத்தை துவக்கி உள்ளார் மது லுனாவட். பண்டு நிறுவனத்தை துவக்கியுள்ள முதல் பெண்மணியான இவர் நமக்கு அளித்த பேட்டி…
இந்தியாவில் கிட்டத்தட்ட 52 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் உள்ளன. நீங்கள் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
நம் நாட்டில், காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்ய 25 லட்சத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் இருக்கின்றனர். ஆனால், மியூச்சுவல் பண்டு திட்டங்களை விற்பனை செய்யும் வினியோகஸ்தர்கள் மூன்று லட்சம் பேருக்கும் குறைவாகவே இருக்கின்றனர்.
எல்லாரிடமும் பணம் இருக்கிறது, நம்பிக்கையான வினியோகஸ்தர்கள் சொன்னால் தான், பணம் போடுவர். ஆனால், வினியோகஸ்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த எந்த மியூச்சுவல் பண்டு நிறுவனமும் முயலவில்லை. புதிய நிறுவனமான நாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் ‘எம்.எப்., சகோதரி’ மற்றும் ‘எம்.எப்., நண்பன்’ என்ற புதிய திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறோம்.
வீட்டில் உள்ள குடும்பப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் மியூச்சுவல் பண்டு பற்றி பயிற்றுவித்து, அவர்களை வினியோகஸ்தர்களாக மாற்றி வருகிறோம்.
உங்கள் வினியோகஸ்தர்களுக்கு என்னவிதமான பயிற்சிகளை வழங்குகிறீர்கள்?
பொதுவாக, வினியோகஸ்தர்கள் ஒரு துறை அல்லது பண்டின் பழைய சாதனைகளைத் தான் எடுத்துச் சொல்லி விற்பனை செய்வர். ஆனால், நாங்கள் அந்த அணுகுமுறையை பின்பற்றுவதில்லை. மாறாக, ஒரு வரு டைய வாழ்க்கையில் சந்திக் கக் கூடிய பிரச்னைகள், அடைய வேண்டிய இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்வதற்கு உதவுவது எப்படி என்பதை சொல்லித் தருகிறோம்.
சந்தையில் இவ்வளவு ஏற்ற இறக்கங்கள் இருக்கும் சூழ்நிலையில், முதலீட்டாளர்களை எப்படி மியூச்சுவல் பண்டு பக்கம் இழுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த ஏற்ற இறக்கங்கள் ஒன்றும் புதிதில்லை. 2008, 2013ம் ஆண்டுகளில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால், சந்தையில் முதலீடு செய்துவிட்டு காத்திருந்தால் தான் பலன் கிடைக்கும்.
ஆனால், பங்குச் சந்தை தள்ளாடிக்கொண்டு இருப்பதால், பல முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் இருந்து, தங்கம், வெள்ளி சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களுக்கு நகர்ந்துகொண்டிருக்கின்றனரே?
இது ஒரு மந்தை மனப்பான்மை. கடந்த ஐம்பது அல்ல, ஐயாயிரம் ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தாலும், மக்களுடை ய நடத்தை இப்படித்தான் இருந்திருக்கிறது. தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் அதன் பயனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக உடனே அங்கே மாறுகின்றனர். இதற்கும் பங்குச் சந்தையின் செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இப்போது ‘மியூச்சுவல் பண்டு சஹி ஹை’ என்ற பிரசாரமே விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளதே?
அடுத்தவர்கள் மீது பழி சுமத்துவதே நம் பழக்கம். அதுபோல இப்போதும், எல்லாரும் ‘செபி’ மீது பாய்கின்றனர். ஆனால், நிறுவனத்தின் சட்டத்திட்டங்கள் ஒழுங்காக பராமரிக்கப்படுகின்றனவா, வெளிப்படைத்தன்மை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது செபியின் முதன்மை நோக்கம். அதை அவர்கள் மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.
நீங்கள் ‘எத்திக்கல் பண்டு’ என்றொரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளீர்கள். அது அனைவருக்குமானதா?
நான் மது, இறைச்சி அல்லது சூதாட்டம் போன்ற துறைகளில் முதலீடு செய்து, என் சொந்த செல்வத்தை வளர்க்கவில்லை. என் முதலீடுகள் அனைத்துமே, தர்மத்தின்படி நடைபெறும் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளின் வாயிலாகவே பெறப்பட்டுள்ளன.
இது போன்ற முதலீட்டை விரும்புவோருக்காக அறிமுகம் செய்துள்ளோம். இந்த எத்திக்கல் பண்டு ‘சாத்வீகமான’ வழியில் செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்று விரும்பும் உயர் மதிப்பு கொண்ட முதலீட்டாளர்களுக்கானது. அவர்களுக்கே பொருந்தும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், மியூச்சுவல் பண்டு துறையில் என்ன மாறுதல்கள் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?
வினியோகஸ்தர்கள் வலிமை அடைவர். வெறுமனே மியூச்சுவல் பண்டு நிறுவனத்துக்கு க மிஷன் ஏஜன்டுகளாக இருப்பவர்கள், ஒன்று காணாமல் போய்விடுவர் அல்லது பெரிய வினியோகஸ்தர்களோடு சேர்ந்துவிடுவர். வினியோகஸ்தர்கள், எல்லா நிதி சார்ந்த திட்டங்களையும் வினியோகிப்பவர்களாக மாறுவர். இப்போது இத்தகைய வலிமையான வினியோகஸ்தர்களின் எண்ணிக்கை 5,000 கூட இல்லை என்பது தான் உண்மை நிலவரம்.
அதேபோல், இனிமேல் புதுப் புது பண்டுத் திட்டங்களுடைய என்.எப்.ஓ.,க்கள் வராது.
இங்கே ஒருவிதமான ஒருங்கிணைப்பு ஏற்படும். துறை சார்ந்த பண்டுகளுக்கான மவுசு குறைந்துவிடும். எல்லாரும் தெளிவாகப் புரியக்கூடிய எளிமையான பண்டுகளை நோக்கி நகர்வர்.
செபியிடம் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
வினியோகஸ்தர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். முன்பு அவர்கள் ‘ஆலோசகர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இப்போதோ, ‘வினியோகஸ்தர்கள்’ என்று சற்று குறைவாக குறிப்பி டப் படுகின்றனர். அவர்களால் பண் டுகளைப் பரிந்துரை செய்ய முடியாது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைகள் நிச்சயம் தேவைப்படுகின்றன.
