மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! – மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி?

ஈரான் புதிய ஆட்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தபா எந்த வித பதவியோ அல்லது விளம்பரமோ இல்லாமல் இருந்து புதிய பதவிக்கு வந்துள்ளார்.

மொஜ்தபா

ஈரானில் அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி அவரது பதவியை ஏற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானின் 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை மொஜ்தபாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.1969-இல் ஈரானின் மஷாத் நகரில் பிறந்த முஜ்தபா, தனது ஆரம்ப காலத்தை ஈரானின் கடைசி ஷாவான முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராக போராடி வந்த தனது தந்தையின் எழுச்சிக்கு மத்தியில் கழித்தார். 1979-ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியின் மூலம் நாட்டின் தலையெழுத்து மாறியதுடன் புதிய ஆட்சி அதிகாரத்தில் காமேனி குடும்பம் முக்கிய அங்கம் வகித்தது.

மொஜ்தபா பின்னர் ஈரானின் மிக முக்கியமான ஷியா ஆன்மீக மையமான கோம் நகரில் உள்ள மதப் பள்ளிகளில் தனது ஆன்மீகப் படிப்பைத் தொடர்ந்தார். இறுதியில் அவர் ஹோஜத்துல் இஸ்லாம் என்ற மதகுரு பதவியை அடைந்தார்.

மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! - மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி?

அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள “அயதுல்லா’க்களில் ஒருவராகக் கருதப்படாவிட்டாலும், ஈரானில் தனது தந்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரின் அலுவலகத்தில் படிப்படியாக தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார்.

தனது இளமைக் காலத்தில், மொஜ்தபா ஈரான் மற்றும் ஈராக் இடையே நடந்த போரில் முக்கிய பங்காற்றினார். இந்த அனுபவம், ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாப்பு படையான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப்படையில் அவருக்கு மிகுந்த தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது.

மொஜ்தபா நீண்டகாலமாக பழமைவாத பிரிவுகளுடனும், இஸ்லாமியக் குடியரசின் அரசியல் பாதுகாப்புப் படையுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு போரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இருந்த ராணுவத் தொடர்புகளே அவர் ஈரானின் புதிய உயர்ந்த பட்ச தலைவராக வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிலர்.

பொது மேடைகளில் பேசுவதையோ அல்லது அதிகாரப்பூர்வ பதவிகள் வகிப்பதையோ அவர் தவிர்த்து வந்தாலும், அரசியல் நியமனங்கள், வியூகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அவர் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
ஈரானின் அரசியலமைப்பின்படி மதகுருமார்கள் அடங்கிய அமைப்பே உயர்ந்த பட்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, இந்த அமைப்பு உடனடியாகக் கூடி மொஜ்தபாவை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அவரது இந்த நியமனம் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மன்னராட்சிக்கு எதிரான அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு குடியரசு நாட்டில், முன்னாள் உயர்ந்த பட்ச தலைவரின் மகனுக்கே மீண்டும் அந்தப் பதவியை வழங்குவது ஒரு வாரிசு அரசியலாக அமைந்துள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஆயதுல்லா அலி காமேனி
ஆயதுல்லா அலி காமேனி

அதேபோல், ஈரானின் மிக உயர்ந்த மத அதிகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான பாரம்பரிய தகுதிகள் மற்றும் மத அறிஞருக்கான அந்தஸ்து அவரிடம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தனிப்பட்ட முறையில், மொஜ்தபா ஒரு முன்னணி பழமைவாத அரசியல்வாதியின் மகளான சஹ்ரா ஹத்தாத் என்பவரை  திருமணம் செய்துள்ளார். இது ஈரானின் உயர்மட்ட அதிகார வர்க்கத்தினருடன் அவருக்குள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையிலிருந்து விலக்கியே வைத்துள்ளனர்.

மொஜ்தபா உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது துல்லியமான சொத்து மதிப்பு குறித்து தெரியவில்லை. அவர் உலகளாவிய ரீதியில் ஒரு சொத்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளதாகவும், பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான நிதியை மேலைநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Source link