நமது நிருபர்
தஞ்சாவூர்: ”ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்று சின்னப்பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க,” என தஞ்சையில் நடந்த பிரசார கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பேசினார்.
தஞ்சாவூர், செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: நான் கடந்த வேலூர் கூட்டத்தில் பேசும் போது சொல்லி இருந்தேன். தமிழகம் தான் விஜய், விஜய் தான் தமிழகம் என்று சொல்லி இருந்தேன். தமிழக மக்களின் ஒரே பிரதிநிதியாக உண்மையான பிரதிநிதியாக நாம் மட்டும் தான் இருக்கிறோம். அதனால் தான் அப்படி சொன்னேன். விஜய் vs ஸ்டாலின் சார் என்று சொன்னேன். இது தமிழகத்திற்கான தேர்தல். ஏன் டில்லிக்கும், தமிழகத்துக்குமான தேர்தல் என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு இருந்தேன்.
ஒர்க்அவுட் ஆகாது
உடனே விஜய் பாஜவுக்காக பேசுகிறார் என்று திரித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். நமது சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்தி ஏமாற்று வேலையை செய்கின்றனர். இனிமேல் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியாது.
சென்னையில் டில்லி, டில்லி என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால், டில்லிக்கு வெள்ளைக் குடை பிடிப்பதும், இது எல்லாம் யார் என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். தமிழகத்தை காப்பாற்றுவது திமுக தான்; ஸ்டாலின் தான் என்று சொல்கின்றனர். இதெல்லாம் ஒர்க்அவுட் ஆகாது பாஸ்!
திமுக தீயசக்தி
ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்று சின்னப்பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. கிரிக்கெட்டில் கூட தமிழக அணியை டில்லி அணியால் தொட்டு கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டிலும் விசில் போடுவது தமிழகம் தான் சிஎஸ்கே. வர போகும் தேர்தலில் விசிலை போட போவது நமது தவெக தான்.
தமிழகம் தான் தவெக. தவெக தான் தமிழகம். இந்த அணி, டில்லி அணி எல்லாம் நொறுங்கும். தவெக அடித்து நொறுக்கும். எனக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவில் யாரும் உள்ளே நுழைய முடியாது.
அப்பா – பிள்ளை உறவு
இது ஒரு அம்மா, பையன் உறவு, அப்பா – பிள்ளை உறவு. அண்ணன்- தங்கை, அண்ணன் தம்பி உறவு. இது தேர்தலுக்காக வந்த உறவு இல்லை. இயற்கையாக அமைந்த உறவு. இதனை தமிழக மக்களும், நானும் உணர்ந்து இருக்கிறோம்.
மற்றவர்களுக்கு வேணும் என்றால் இது தேர்தல்; எனக்கு மற்றும் மக்களுக்கும் இது ஒரு எமோஷன். ஊழலற்ற, உண்மையான, சமூகநீதியை நிலைநாட்ட நம்ம ஆட்சியை நீங்க அமைப்பீர்கள் தானே? விஜய்க்கு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே?
அடுத்த ஜென்மத்தில்
இந்த விஜயை நம்புகிறீர்கள் தானே, ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் பறக்கும் தானே! அந்த விசில் சத்தம் ஒவ்வொரு பூத்திலும் புயலாக ஒலிக்கும் தானே? உடம்பு சரியில்லாத போது தான் டாக்டரை நினைப்போம். பிரச்னை என்றால் வக்கீலை தேடி போவோம். இது மனிதனின் இயல்பு.
நாம் சாப்பாடும் போது ஒருவர் பற்றி யோசிப்போம். அது யாரும் இல்லை. விவசாயிகள். அவர்கள் பார்ப்பதற்கு வேண்டுமானால், சாதாரணமாக இருப்பார்கள். அவர்கள் சாதாரண ஆள் கிடையாது.
கடவுளுக்கே படையல் போடுபவர்கள் விவசாயிகள். அடுத்த ஜென்மத்தில் விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விவசாயிகளை பற்றி எனக்கு தெரியாது ஒத்து கொள்கிறேன். மற்றவர்கள் மாதிரி நானும் டெல்டாகாரன் என்று உங்கள் காதில் டால்டா ஊற்ற நான் வரவில்லை. எனக்கு விவசாயம் பற்றி தெரியவில்லை என்றாலும் அவர்கள் படுகிற கஷ்டம் எனக்கு தெரியும்.
தமிழகமே திவால்
நமது ஆட்சி அமைந்ததும் தீர்க்க வேண்டிய பிரச்னைகளில் விவசாய பிரச்னைகளும் ஒன்று. தண்ணீர் திவால் என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதனை படிக்கும் போது பகீர் என்று இருந்தது. அதற்கு காரணம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்காமல் விட்டது தான் காரணம். மணல், கனிம வளங்களை கொள்ளை அடித்தால் வேறு என்ன நடக்கும்?
மணல் கொள்ளையர்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட் சொன்னதை நீங்கள் மறந்து விட்டீர்களா? மணல், கனிம வள கொள்ளைக்கு மணல் மாபியா குழு தான் காரணம் என்று மதுரை ஐகோர்ட் கிளை கூறியதை மறந்துவிட்டீர்களா? மணல் மாபியா குரூப்புக்கு திமுக ஆதரவு அளிப்பதை இல்லை என்று யாரும் சொல்ல முடியுமா? தண்ணீர், மணல், கனிமவளம் என மொத்த தமிழகமே திமுக ஆட்சியில் திவாலாக போகிறது.
மானே, தேனே…!
கடன் மேல் கடன் வாங்கி உங்களது அரசே படுத்துவிட்டது. பரந்தூர் விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? பெரிய, பெரிய திட்டங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்த உடனே செய்ய மாட்டார்கள், ஆட்சி முடியும் போது தான் செய்வார்கள்.
மக்கள் மீது அக்கறை இருந்தால் ஆட்சிக்கு வந்த உடனே பெரிய திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியது தானே? ஆட்சிக்கு வந்து உடன் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டாமல் முடியும் போது அடிக்கல் நாட்டுகிறீர்கள்.
ஓட்டுக்காக நீங்கள் என்ன பேசினாலும் மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் என்று நினைத்தீர்களா? மீனவர்கள் பிரச்னைக்காக, மானே, தேனே, பொன் மானே போட்டு அவ்வப்போது கடிதம் எழுதி விட்டு துாங்க போய் விடுவார்.
விஜய் வந்தால் நமக்கு பிழைப்பு போய்விடும் என்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. என்னை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜயை முடக்க முடியாது.
திமுக தொடர்ந்து 2வது முறை ஆட்சிக்கு வருவது என்பது நடக்கவே நடக்காது; கருணாநிதியாலயே முடியவில்லை. ‘அடுத்து நாங்க தான் என கூறும் யாராவது நாங்க ஊழல் செய்யாதவர்கள், ஊழல் செய்ய மாட்டோம்’, என மனசாட்சியோட சொல்ல முடியுமா?
கமிஷன் இருக்காது
தவெக ஆட்சியில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் வீணாவதை பார்த்துக் கொண்டு இருக்காது. மூட்டை ஏற்றி இறக்க ஒரு பைசா கமிஷன் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். கமிஷன் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுப்போம். கல்வி, மருத்துவம், ரேஷன், சாலை, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தவெக முன்னுரிமை.
விவசாயிகள் எதிர்க்கும் எந்த திட்டமாக இருந்தாலும் தவெக ஆட்சியில் நிராகரிக்கப்படும் தென் மாவட்டத்தில் ஒரு ஊரில், உங்கள் தந்தைக்கு சிலை வைக்க முயற்சி செய்தீர்களே! அப்போ என்ன கேட்டாங்க சுப்ரீம் கோர்ட்டில்? ‘மக்கள் பணத்துல யாருக்கு புகழ் பாட பார்க்கிறீங்க’ என்று கேட்டாங்களே, அதற்கு என்ன அர்த்தம்? ஊரான் வீட்டு நெய்யுல உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க என்று அர்த்தம். இவ்வாறு விஜய் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசியது தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
