வந்தது ஞானோதயம்: ஒற்றுமையே பலம் என்கிறார் மாணிக்கம் தாகூர்

சென்னை: திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இப்படிபட்ட சூழலில், கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டசபை தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் குரல் கொடுத்தனர். அதற்கேற்றாற் போலவே, தொகுதி பங்கீடு நடத்த 2 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் குழு அமைத்தும், திமுக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தது. இது காங்கிரஸ் தலைவர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. எனவே, திமுக கூட்டணியை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வெளிப்படையாக விமர்சிக்கத் துவங்கினர்.

அதுமட்டுமில்லாமல், தவெக கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைமை வரை எடுத்துச் சென்றனர். இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நிலவி வந்தது.இதையடுத்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், திமுக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சி நிர்வாகிகளையும் சமாதானம் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக திமுக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இப்படிபட்ட சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவில்; தனிநபர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். நம் அனைவரை விடவும் கட்சியே பெரியது. காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு, அனைவரும் கட்டுப்படுவோம் . ஏனெனில் ஒற்றுமையே நமது பலம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Source link