கிடைக்குமா லாரஸ் விருது * இந்திய பெண்கள் அணி பரிந்துரை

மாட்ரிட்: சிறந்த அணிக்கான லாரஸ் விருது பரிந்துரை பட்டியலில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இடம் பெற்றுள்ளது.

லாரஸ் விளையாட்டு அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 2019ல் வினேஷ் போகத் (மல்யுத்தம்), 2022ல் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), 2025ல் ரிஷாப் பன்ட் (கிரிக்கெட்) பல்வேறு பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.

தற்போது சிறந்த அணிகளுக்கான விருதிற்கு, 2025ல் முதன் முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தவிர, முதன் முறையாக பரிந்துரை செய்யப்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணி என்ற பெருமையும் பெற்றது இந்தியா.

ஹர்மன்பிரீத் தலைமையான இந்திய அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை (338), வீழ்த்தியது. பெண்கள் ஒருநாள் அரங்கில் அதிக ரன்களை சேஸ் செய்து வென்ற அணி என சாதனை படைத்தது இந்தியா (341/5). அடுத்து நடந்த பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, முதன் முறையாக கோப்பை கைப்பற்றியது.

தவிர இங்கிலாந்து பெண்கள் கால்பந்து அணி, ஐரோப்பாவின் ரைடர் கோப்பை அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்மன், மெக்லாரன் ‘பார்முலா-1’ அணிகளும் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

லாரஸ் உலக விளையாட்டு அகாடமியை சேர்ந்த நடுவர்கள் வெற்றியாளரை தேர்வு செய்வர். ஏப்ரல் 20ல் மாட்ரிட்டில் (ஸ்பெயின்) நடக்கும் விழாவில் விருது வழங்கப்படும்.

Source link