இந்திய பொருளாதாரத்தின் அசைக்க முடியாத துாண்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 1955ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதுமுதல் நாட்டின் நிதித் துறையில் முதன்மையான இடத்தை தக்கவைத்து வருகிறது. ஒட்டுமொத்த டிபாசிட் சந்தையில் 22.50 சதவீதம் மற்றும் கடன் சந்தையில் 19.50 சதவீத பங்குகளை கொண்டுள்ள இவ்வங்கி, இந்திய அரசின் 55.50 சதவீத பங்களிப்புடன் ஒரு அரசு சார்ந்த நிறுவனமாகச் செயல்படுகிறது. சர்வதேச அளவில் ‘பார்ச்சூன் 500’ பட்டியலில் இடம்பிடித்துள்ள எஸ்.பி.ஐ., தனியார் வங்கிகளுக்கு இணையாக தொழில்நுட்பத்திலும் லாபத்திலும் சிறந்து விளங்குகிறது.

முக்கிய தொழில்கள் எஸ்.பி.ஐ., அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான நிதிச் சேவைகளை வழங்குகிறது. சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள் முதல், வீடு, கார், கல்வி மற்றும் தனிநபர் கடன்கள் வரை சில்லரை வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. சிறு தொழில்கள் முதல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை கடன் வழங்கி வரும் இவ்வங்கி, மத்திய அரசின் 26 அமைச்சகங்களுக்கு நம்பகமான நிதி நிறுவனமாகவும் செயல்படுகிறது.

புதிய முயற்சி பாரம்பரிய வங்கியாக இருந்தாலும், நவீன டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப, எஸ்.பி.ஐ., தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. இதன் ‘யோனோ’ செயலி 9.65 கோடி பயனாளர்களுடன், ஆசியாவின் மிகப்பெரிய சூப்பர் வங்கி செயலிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில், நேரடி வங்கி சேவையை விரும்பும் மக்களுக்காக தனது கிளைகளையும் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.

வங்கி தற்போது அதிக இடர்ப்பாடு கொண்ட பெருநிறுவன கடன்களை தவிர்த்து, பாதுகாப்பான வீட்டுக்கடன் மற்றும் தனிநபர் கடன்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

வங்கியின் வருவாயை உயர்த்துவதில் அதன் துணை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. காப்பீடு, சொத்து மேலாண்மை மற்றும் கிரெடிட் கார்டு போன்ற சேவைகளை, தனது கிளைகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ‘கிராஸ் செல்லிங்’ முறையில் வங்கி சிறந்து விளங்குகிறது. இதன் விளைவாக, 2026ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், வாடிக்கையாளர் மதிப்பு மேம்பாடு வாயிலான கட்டண வருவாய் 21 சதவீதம் வளர்ச்சியடைந்து, 1,554 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

துணை நிறுவனங்கள் எஸ்.பி.ஐ., லைப்: வரிக்கு பிந்தைய லாபம் 1,666 கோடி ரூபாய். ரினீவல் பிரீமியம் 21 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 5.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்: 1,557 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கார்டு வாயிலான செலவினங்கள் 29 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளன.

எஸ்.பி.ஐ., கேப்பிடல் மார்க்கெட்ஸ்: 2,412 கோடி ரூபாய் லாபத்துடன், இந்திய கடன் சந்தையில், ‘மேண்டேட்டட் லீட் அரேஞ்சர்’ வரிசையில் முதலிடத்தில் உள்ளது.

எஸ்.பி.ஐ., ஜெனரல்: 523 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ள இந்நிறுவனம், தனியார் காப்பீட்டு சந்தையில் 6.64 சதவீத பங்கை கொண்டுள்ளது.

எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு: 12.49 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், 15.42 சதவீத சந்தை பங்கை பெற்று முன்னணியில் உள்ளது.

மூன்றாம் காலாண்டு முடிவுகள்: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், எஸ்.பி.ஐ., 21,028 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகம் என்பதுடன், வங்கியின் வரலாற்றிலேயே ஒரு காலாண்டில் ஈட்டப்பட்ட மிக உயர்ந்த லாபமாகும். ஒட்டுமொத்த செயல்பாட்டு திறன் மேம்பாடு மற்றும் மிக குறைந்த கடன் செலவுகள் ஆகியவை இந்த வரலாற்று சிறப்புமிக்க லாபத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

வளர்ச்சி மற்றும் நிதிநிலை: வங்கியின் கடன் வழங்கல், கடந்த ஆண்டை விட 15.10 சதவீதம் உயர்ந்து, 46.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சிறு மற்று ம் நடுத்தர தொழில்கள் 21 சதவீத வளர்ச்சியுடனும், வி வசாயம் 16.6 சதவீத வளர்ச்சியுடனும், சில்லரை தனிநபர் கடன்கள் 15 சதவீத வளர்ச்சியுடனும், பெருநிறுவன கடன்கள் 13.4 சதவீத வளர்ச்சியுடனும் உள்ளன.

வங்கியின் வைப்புத்தொகை 9 சதவீதம் உயர்ந்து, 57 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடும் போட்டி நி லவும் சூழலிலும், நடப்பு கணக்கு – சேமிப்பு கணக்கு விகிதம் சுமார் 39.10 சதவீதமாக நிலைபெற்றுள்ளது. சில்லரை காலமுறை வைப்புத்தொகை 14.50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது, சில்லரை முதலீடுகளை திரட்டுவதில் உள்ள திறனை காட்டுகிறது.

சந்தையில் நிலவும் தேவையின் மீதான நம்பிக்கை மற்றும் கடன் வழங்குவதில் ஒழுங்குமுறையை கடைப்பிடித்து, சந்தை பங்கை கைப்பற்றும் திறனை அடிப்படையாக கொண்டு, வங்கி நிர்வாகம் தனது கடன் வளர்ச்சி இலக்கை 12-14 சதவீதம் என்பதிலிருந்து 13-15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

வருவாய் இயந்திரங்கள் வட்டி வருவாய்: வங்கியின் நிகர வட்டி வருவாய் 9 சதவீதம் உயர்ந்து 45,190 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வட்டி வரம்பு 3 சதவீதம் என்ற அளவில் நிலையாக தக்க வைக்கப்பட்டு உள்ளது.

கட்டண வருவாய்: கிராஸ் செல்லிங் மற்றும் வாடிக்கையாளர் மதிப்பு மேம்பாடு வருவாய் (21% உயர்வு) மற்றும் நிலையான பரிவர்த்தனை கட்டணங்கள் காரணமாக, இது 15.7 சதவீதம் உயர்ந்து 8,404 கோடி ரூபாயாக உள்ளது.

நிதிச் சந்தை வருவாய்: முதலீடுகளை மறுமதிப்பீடு செய்தல் அல்லது விற்பனை செய்ததன் வாயிலாக கிடைத்த லாபம், கடந்த ஆண்டைவிட உயர்ந்து 3,279 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

அந்நிய செலாவணி: இதன் வாயிலாக கிடைத்த வருவாயும் மேம்பட்டு உள்ளது.

சொத்து தரம்: மிக சிறப்பாக உள்ளது. மொத்த வாராக்கடன் 1.57 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.39 சதவீதமாகவும் குறைந்துள்ளன. இவை இரண்டும் கடந்த ஆண்டை விட மேம்பட்டுள்ளன. வாராக்கடன் பாதுகாப்பு விகிதம் 75.5 சதவீதமாக உள்ளது.

எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்க எஸ்.பி.ஐ., 30,642 கோடி ரூபாய் கூடுதல் நிதியை கையிருப்பில் வைத்துள்ளது. இது, நிகர வாராக்கடனை போல கிட்டத்தட்ட 170 சதவீதமாகும்.

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு: வங்கிகளுக்கிடையிலான போட்டியால் வைப்புத்தொகை வட்டிச் செலவுகள் உயரக்கூடும். மேலும், சந்தை வருவாய் மற்றும் பொருளாதார மாற்றங்களால் ஏற்படும் கடன் செலவுகளை கண்காணிக்க வேண்டும்.

இருப்பினும், வங்கியின் வலுவான நிதி கையிருப்பு மற்றும் மேம்பட்ட செயல்திறன் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள பாதுகாப்பாக இருக்கும்.

எதிர்கால கண் ணோட்டம்: சில்லரை வர்த்தகம், விவசாயம் மற்றும் சிறு தொழில்களில் காணப்படும் வேகமான வளர்ச்சியால், கடன் வளர்ச்சி இலக்கை 13- – 15 சதவீதமாக உயர்த்தி எஸ்.பி.ஐ., தலைவர் சி.எஸ். செட்டி அறிவித்துள்ளார்.

எஸ்.பி.ஐ., ஏ.எம்.சி., மற்றும் எஸ்.பி.ஐ., ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய துணை நிறுவனங்கள் விரைவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளது. இந்திய பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வரும் நிலையில், அதனுடன் இணைந்து வளர எஸ்.பி.ஐ., தயார் நிலையில் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

Source link