உங்களுக்கு, வாக்கியப்படி மார்ச்-6 அன்று நிகழவுள்ள சனிப்பெயர்ச்சியில் ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் சனி பகவான். அதனால் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன… ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த பலன்கள் உங்களுக்காக!

மிதுன ராசிக்கு அதிபதி புதன். பொதுவாகவே ராசிப்படி உங்களுக்கு எச்சரிக்கையுடன் பழகும் பாங்கும், பொருளீட்ட பல வழிகளைத் தேர்ந்தெடுக்கும் துணிவும் இருக்கும். வீடு-வாகனம் போன்றவற்றை முழுமையாக அனுபவிக்கும் யோகம் பெற்றவர் நீங்கள்.

மிதுன ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:
1. உங்கள் ராசிக்கு, 10-ம் வீட்டில் சனி அமர்கிறார். எதிலும் நல்லதே நடக்கும். இதுவரையிலும் ஏதேதோ காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் இனி பூர்த்தியாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.
2. வீடு கட்டுவதற்கு வங்கிக்கடன், குழந்தைப் பாக்கியம் எதிர்பார்த்திருக்கும் அன்பர்களுக்கு குழந்தை வரம், உறவுகளிடையே இணக்கம், சொந்த ஊரில் மதிப்பு – அந்தஸ்து ஆகிய அனைத்து விஷயங்களும் கிடைக்கும் காலம் இதுவாக இருக்கும்.
3. இந்தச் சனிப்பெயர்ச்சியில் வரும் ஏப்ரல்-2 வரை குடும்பத்தில் கவனம் தேவை. உங்களின் பாதகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலம் என்பதால், வீட்டில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

4. சனி பகவான் உத்திரட்டாதியில் பயணிக்கும் காலமான 2.4.2026 முதல் 14.4.2027 வரை, எதிர்பாராத பண வரவு, எடுத்த வேலையில் வெற்றி உண்டு. வெளிநாட்டு நண்பர்கள் உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளுக்குத் தடபுட லாக திருமணம் முடியும்.
5. எனினும் சனி பகவானின் வக்ர சஞ்சார காலத்தில் 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை அலைச்சல், காரியத்தடைகள் வந்துபோகும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம்.
6. இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 4, 7 மற்றும் 12-ம் வீட்டைப் பார்க்கிறார். ஆகவே, தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். அவருக்குக் கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து நீங்க வாய்ப்பு உண்டு. சுப விரயங்கள் வரக்கூடும்.
7. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்குக் குடும்பத்தில் அமைதி திரும்பும். பணிக்குச்செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகளும் வந்து சேரும்.
8. வியாபாரத்தில், புதுப் பாய்ச்சல் காட்டுவீர்கள். எனினும் புது முதலீடுகளில் கவனம் தேவை.போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள்.
9. ஒருசிலருக்குப் பெரிய நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கண்ணாடி, ஆடை, கெமிக்கல் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
10. உத்தியோகத்தில், இப்போது சனி பகவான் ராசிக்கு 10-ம் வீட்டில் வந்து அமர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். எனினும், மேலதிகாரி ஆதரவாக இருப்பார். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மதிப்பு – மரியாதை கூடும்
11. ஒருசிலருக்குப் பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. அடிக்கடி விடுப்பு எடுக்காதீர்கள். முக்கிய பதிவேடுகளைக் கவனமாகக் கையாளுங்கள். கணினித் துறையினருக்கு, அதிக சம்பளத்துடன் திடீர் இடமாற்றம் உண்டு.
