ரிஷபம்: `லாப வீட்டில் சனீஸ்வரர், அதிர்ஷ்டம் தருவார்!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷப ராசி. ரிஷப ராசிக்கு சந்திரன், சுக்கிரன், புதன், சனி ஆகியோர் நல்ல பலன்களை அளிப்பதில் முன்னிலையில் இருப்பர். இவர்களது ஒத்துழைப்பானது, மற்ற கிரகங்களின் தாக்கத்தால் விளையும் விபரீதங்களைத் தாங்கும் திறமையை ஏற்படுத்தும் எனலாம்.

ரிஷபம் – சனிப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:

1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை சனி பகவான் லாப வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். மனச்சோர்வு நீங்கும்; மனதில் புதுச் சிந்தனைகள் தோன்றும். குடும்பத்தில் நிம்மதி தங்கும்.

2. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைவரத்துக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். நகை ஆபரணங்கள் சேரும்.

3. சகோதரர்களுடனான கசப்பு உணர்வு நீங்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. வாழ்க்கைத்துணைவர் வழியில் மதிப்பு – மரியாதை கூடும்.

4. மீனத்தில் அமரும் சனிபகவான், 3-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எனினும் அவ்வப்போது அலைச்சல், டென்ஷன் வந்து போகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

சனிபகவான்

5. சனிபகவானின் சஞ்சாரப்படி அவர் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ஆனாலும் பூர்விகச் சொத்துப் பிரச்னைகள், வாகனப் பயணத்தில் கவனத்துடன் செயல்படவேண்டும். இல்லையெனில் சொத்துக்கள் மூலம் விரயம் வழக்குகள் வந்து சேரலாம். வாகனப் பயணத்தில் சிறு சிறு விபத்துகள் வரக்கூடும்.

6. அதேபோல் சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கண்காணிப்பு தேவை. தவறான வழிகளில், பொழுதுபோக்குகளில் அவர்களின் கவனம் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அன்புடன் வழிநடத்துங்கள்.

7. சனிப்பெயர்ச்சி நிகழ்ந்து அடுத்த ஓரிரு மாதங்கள் வரை தந்தை யுடன் கருத்துமோதல், வீண் செலவுகள் வந்து நீங்கும். அதேநேரம், அவர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் காலமான 2.4.2026 முதல் 14.4.2027 வரை, பொன்-பொருள் சேரும். புது வேலை அமையும்..

8. அடுத்த வருடம் (2027) ஏப்ரல் முதல் ஒரு வருட காலத்தில், சிலருக்குப் புது வீடு அமைய வாய்ப்பு உண்டு. சனி பகவான் ரேவதியில் செல்லும் அந்தக் காலத்தில், திருமணக் காரியங்கள் கூடிவரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

9. சனி பகவான் வக்ர சஞ்சாரக் காலத்தில்… 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை வீண் அலைச்சல், காரியத்தடைகள் வரக்கூடும். முன்கோபம், சிறியளவில் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.

10. வியாபாரிகளே, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

11. உத்தியோகஸ்தர்களே, உங்களின் நிர்வாகத் திறமைகள் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ஒருசிலர், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவார்கள்.

Source link