சென்னை: கடும் இழுபறியில் இருந்து வந்த தொகுதிகள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தில், 20 ஆண்டு களுக்கும் மேலாக, தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இரு கட்சிகளின் தலைமையும், நட்புடன் இருந்ததால், தேர்தலை எவ்வித இடையூறுமின்றி சந்தித்து வந்தன. ஆனால், சமீபகாலமாக நடந்த பல்வேறு நிகழ்வுகள், இரு கட்சி களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
நெருடல்
எனினும், வரும் சட்டசபை தேர்தலை, காங்கிரசுடன் இணைந்தே எதிர்கொள்ள தி.மு.க., தரப்பு முடிவெடுத்தது. ஆனால், நடிகர் விஜய், தன் கட்சியுடன் கூட்டணி சேருவோருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் எனக் கூறியதும், களம் மாறத் துவங்கியது. காங்கிரசை நோக்கி, த.வெ.க., வலுவான துாண்டிலை வீச, தி.மு.க.,வுடன் இருந்த நெருடல்களை காங்கிரசார் பெரிதாக்கினர். த.வெ.க.,வுடன் கூட்டணி செல்லலாம் என வெளிப் படையாக பேசத் துவங்கினர்.
இந்த சூழலில், தி.மு.க., தரப்பில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசிய காங்கிரஸ் தரப்பு, ’41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி அதிகாரத்தில் 25 சதவீத பங்கு, இரண்டு ராஜ்யசபா சீட், துணை முதல்வர் பதவி’ என, ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்தது.
தி.மு.க., தரப்பில், ‘காங்கிரசுக்கு 21 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும்’ என, ‘கூலாக’ தெரிவித்தனர். இது காங்கிரஸ் தலைமையை, தி.மு.க., மீது அதிருப்தி அடைய வைத்தது.
நிர்ப்பந்தம்
இதற்கிடையில், தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ளதால், அதற்குள் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், இரு தரப்புக்கும் ஏற்பட்டது. நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னையில் முதல்வர் ஸ்டாலனை சந்தித்து பேசினார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் உடன்இருந்தார்.
இதன் பிறகு அவர் டில்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் பேசினார்.
இந்நிலையில், இன்று திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, காங்கிரசின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவினர் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்துடன் ராஜ்யசபா சீட் ஒன்றை வழங்க திமுக முன்வந்ததை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. அதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சேர்ந்து கையெழுத்து போட்டனர்.
காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால், அதற்கான வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் விரைவில் அறிவிக்க உள்ளது. மேலும், அறிவிக்கப்படும் வேட்பாளர் நாளையே வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்றும் தெரிகிறது.
