கால்பந்து: ரியல் மாட்ரிட் 'ஷாக்' * ரவுண்ட் அப்

மாட்ரிட்: ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மாட்ரிட்டில் நடந்த போட்டியில் பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் இடம் பெற்ற ரியல் மாட்ரிட் அணி, கெடாபே அணியை சந்தித்தது. போட்டியின் 39 வது நிமிடத்தில் சாட்ரியானோ, ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நேரத்தில் இரு அணியிலும் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். வினிசியஸ் ஜூனியர் (90+4வது) ‘எல்லோ கார்டு’ பெற்றார். மஸ்டன்டுவானோ (ரியல் மாட்ரிட்), லிசோ (கெடாபே) ‘ரெட் கார்டு’ பெற்றனர். முடிவில் ரியல் மாட்ரிட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

ஸ்னுாக்கர் தொடரில் பங்கஜ்

மும்பை: மும்பையில் ஸ்னுாக்கர் கிளாசிக் தொடர் மார்ச் 6ல் துவங்குகிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 13.5 லட்சம். இதில் கடந்த மூன்று சீசனில் பட்டம் வென்றவர் இந்தியாவின் ‘சீனியர்’ பங்கஜ் அத்வானி. இவர், மீண்டும் இத்தொடரில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். வெற்றி பெறும் வீரர், கோப்பையுடன் ரூ. 3.5 லட்சம் பரிசு பெறுவார்.

* செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆறாவது சுற்றில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன், சக வீரர் அரவிந்த் சிதம்பரத்தை எதிர்கொள்கிறார்.

* பெண்கள் அணிகளுக்கான ‘பில்லி ஜீன் கிங்’ கோப்பை தொடர், ஏப். 6ல் டில்லியில் துவங்குகிறது. இதில் இந்தியா, ஆசிய/ஓசியானா குரூப் 1ல் இடம் பெற்றுள்ளது. இதற்கான இந்திய அணியில் 21 வயது வைஷ்ணவி, சஹாஜா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அன்கிதா உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

* ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர், வரும் 2026, மே 7-24ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய பெண்கள் அணி, நட்பு போட்டிகளில் பங்கேற்கிறது. நேற்று 2-1 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தியது.

* நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, 3-0 என (11-2, 11-4, 11-5) உள்ளூர் வீரர் தாமசை வென்றார்.

* அல்பேனியாவின் திரானா நகரில் சர்வதேச மல்யுத்த ‘ரேங்கிங்’ தொடர் நடந்தது. ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ 65 கிலோ பிரிவில் அசத்திய இந்தியாவின் சுஜீத், இத்தொடரில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக (2025, 2026) தங்கம் வென்றார். இதையடுத்து பிப்ரவரி மாதத்தின் சிறந்த ‘பிரீஸ்டைல்’ வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

Source link