ஈரானின் புதிய உச்ச தலைவரானார் கொல்லப்பட்ட கமேனியின் மகன்

டெஹ்ரான்: போரில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி, 56, அந்நாட்டின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

மேற்காசிய நாடான ஈரானில், உச்ச அதிகாரம் படைத்தவரும், மூத்த மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி, கடந்த 28ம் தேதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பெரும் எதிர்பார்ப்பு

தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் கமேனி மட்டுமின்றி, அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலிரெசா அராபி என்ற மதகுரு நியமனம் செய்யப்பட்டார்.

கமேனிக்கு அடுத்தப்படியாக அந்த இடத்தை நிரப்பப்போவது யார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

இந்நிலையில், ஈரானின் ‘அசெம்பிளி ஆப் எக்ஸ்பெர்ட்ஸ்’ என்ற 88 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர்கள் சபை அவசர கூட்டத்தை கூட்டியது.

வழக்கமாக நிபுணர்கள் சபை கூட்டம், கோம் நகரில் உள்ள செயலகத்தில் நடத்தப்படும். ஆனால், இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல்களால் அந்த கட்டடம் நேற்று முன்தினம் முழுதும் தரைமட்டமாக்கப்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பான மாற்று இடத்தில் அவர்கள் அவசர கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில், அயதுல்லா அலி கமேனியின் இளைய மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி, புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமேனிக்கு அடுத்த இடத்தில் வைக்கப்பட்ட மொஜ்தபா, ஷியா மதகுருவாக இருந்தாலும் எந்த அதிகாரப்பூர்வ அரசு பதவியும் வகிக்கவில்லை. ஆனால் நீண்டகாலமாக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் உளவுத்துறை அமைப்புகளுடனும் ஆழமான தொடர்புகளை கொண்டுள்ளதால், மிகவும் சக்திவாய்ந்த நபராக கருதப்படுகிறார்.

நேரடி நியமனம்

இந்த நியமனம் ஈரானின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது. ஏனெனில், உச்ச தலைவர் பதவி பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதகுருக்களால் நிரப்பப்படும்.

ஆனால், நேரடியாக தந்தையிடம் இருந்து மகனுக்கு உச்ச தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த முடிவு இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடுமையான அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய மற்றும் ஈரான் எதிர்க்கட்சி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கோலோச்சிய கமேனி

ஈரானில் 1979ம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு உருவானதிலிருந்து உச்ச தலைவர் பதவியை வகித்தவர்கள் மிகக் குறைவு. இது நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் கொண்ட பதவியாகும். இஸ்லாமிய குடியரசின் நிறுவனரான அயதுல்லா ரூஹொல்லா கோமெனி, 1979 முதல் 1989 வரை, 9 ஆண்டுகள் 6 மாதங்கள் உச்ச தலைவராக இருந்தார். அவர் இயற்கை மரணம் அடைந்த பின், ஈரானின் அதிபராக இருந்த அயதுல்லா அலி கமேனி உச்ச தலைவரானார். அவர், 36 ஆண்டுகள் அந்த அதிகாரத்தை கையில் வைத்திருந்தார்.

புதியவரும் கொல்லப்படுவார்

ஈரானின் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் எந்தத் தலைவரும், இஸ்ரேலை அழிக்கும் திட்டத்தை தொடர்ந்து நடத்துபவர். அமெரிக்கா மற்றும் சுதந்திர உலகத்தை அச்சுறுத்துபவர். சக நாடுகளை மிரட்டுபவர். ஈரான் மக்களை ஒடுக்குபவர். அவருடைய பெயர் என்னவாக இருந்தாலும் சரி, எங்கு ஒளிந்திருந்தாலும் சரி அந்த நபரை அழிப்பது எங்கள் இலக்கு. இஸ்ரேல் கட்ஸ் இஸ்ரேல் ராணுவ அமைச்சர்

Source link